Thu. Nov 20th, 2025

தீவனூர் அருகே சாலையோரம் நின்றிருந்த மகிழுந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே செஞ்சி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து நேற்று (அக்.13) மாலை சுமார் 4 மணியளவில் தீவனூர் அருகே சென்று கொண்டிருந்த பொழுது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாக்கும் வகையில் வந்துள்ளது

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தால் விபத்து ஏதும் நேராமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை திசை திருப்ப முயன்றுள்ளார் அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் நின்றிருந்த TN-16 U2277 என்ற பதிவு கொண்ட மகிழுந்து (கார்) மீது TN-25 N0703 என்ற பதிவின் கொண்ட அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக நின்று கொண்டிருந்த மகிழுந்தின் உள்ளே பயணித்தவர்கள் வாகனத்தில் இல்லாததாலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொது மக்களுக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த விபத்தினால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்து நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரோசனை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை ஜேசிபி இயந்திரம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

By TN NEWS