Sun. Oct 5th, 2025



சமூக விரோதிகள் ஆக்கிரமித்த பழைய அரசு மருத்துவமனை – பொதுமக்கள் அச்சம்:

பேரணாம்பட்டு, செப்.28:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் கடந்த சில மாதங்களாக வெளிமாநில மதுப் பாக்கெட் விற்பனையின் புதிய தளமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பழைய அரசு மருத்துவமனை – சமூக விரோதிகளின் தஞ்சம்:

பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டிடம் தற்போது சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஆந்திரா, கர்நாடகா மதுப் பாக்கெட்டுகள் சுதந்திரமாக விற்பனை செய்யப்படுவதோடு, மாலை நேரங்களில் மதுபோதையில் சிலர் சாலையில் பெண்களுக்கு தொந்தரவு செய்வதும் வழக்கமாகிவிட்டது.

அதிகாரிகளின் ஆய்வு – காவல் நிலைய திட்டம்:

பேரணாம்பட்டு பேருந்து நிலைய விரிவாக்கத் திட்டத்துடன் இணைந்து, பழைய அரசு மருத்துவமனையை தற்காலிக காவல் நிலையமாக மாற்றும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அவர்கள் 10 நாட்களுக்கு முன்பு நேரில் ஆய்வு செய்திருந்தார். எனினும், காவல் நிலையம் அமைக்கும் முன்பே, குற்றவாளிகள் இப்பகுதியை தங்களின் “செயல்பாட்டு தளமாக” மாற்றியிருப்பது கவலைக்கிடமாக உள்ளது.

பொதுமக்களின் அச்சம்:

“மருத்துவமனை இருந்த இடம் பாதுகாப்பற்ற சூழலாக மாறிவிட்டது. பெண்கள், மாணவிகள் பயந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிமாநில மதுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதால், உள்ளூர் இளைஞர்கள் அதில் சிக்கிக் கொள்வார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்,” என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

காவல்துறைக்கு கோரிக்கை:

சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களிடம் உடனடி நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்து, அந்த இடத்தில் நிரந்தர காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


தமிழ்நாடு டுடே செய்தியாளர் வேண்டுகோள்:

பேரணாம்பட்டில் நிலவி வரும் இந்த நிலை, சட்டமும் ஒழுங்கும் குறைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. வெளிமாநில மது பாக்கெட் விற்பனை என்பது வெறும் குற்றச்செயலாக இல்லாமல், அது சமூக நாசத்திற்கு வழிவகுக்கும் அபாயம்.

மாவட்ட நிர்வாகம் தற்காலிக காவல் நிலையம் அமைக்கும் முயற்சியை விரைவுபடுத்த வேண்டும். அதோடு, நிரந்தர காவல் கண்காணிப்பு, ரெய்டுகள், மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிட்டால், இந்த “மது பாக்கெட் மையம்” எதிர்காலத்தில் பேரணாம்பட்டின் அமைதியையும், இளைஞர்களின் வாழ்வையும் சீரழிக்கும் அபாயம் உண்டு.

சட்டம் செயல்பட வேண்டிய இடத்தில் “அலட்சியம்” காட்டக்கூடாது. மக்கள் உயிரும், பெண்களின் பாதுகாப்பும், இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் முன்னர், அதிகாரிகள் விழித்தெழ வேண்டும்.


✍️ கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்

By TN NEWS