புதுதில்லி, செப்டம்பர் 21:
நாளை (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி வரி குறைப்புகள் பற்றிய விளக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டுப் மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, வரி குறைப்பின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தி, நடுத்தர மக்களுக்கு நேரடி நன்மைகள், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் ஆகியோரின் வாழ்க்கையில் ஏற்படும் நேரடி தாக்கம், வணிகர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.
ஜிஎஸ்டி குறைப்பின் முக்கிய அம்சங்கள்:
நவராத்திரி முதல் நாளில் அமல்: செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி குறைப்பு அமலாகி, மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெற முடியும். இதனால் சேமிப்பும் அதிகரிக்கும்.
நடுத்தர குடும்பங்களுக்கு நேரடி தாக்கம்: நடுத்தர மக்கள் முதல் பரிசு அனுபவித்திருப்பதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியை வழங்குகிறது. 12% GSTல் இருந்த 99% பொருட்கள் 5% GSTக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும்.
சிறு, குறு, நடுத்தர தொழில்கள்: மக்கள் தேவைக்கும் தரத்துக்கும் ஏற்ப பொருட்களை தயாரிக்க வேண்டும். உள்நாட்டுப் பொருட்கள் சிறந்த தரத்துடன், உலக தரத்துடன் போட்டியிடும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.
உள்நாட்டுப் பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்: இது இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு உதவும். சுதந்திரத்திற்குப் பிறகும் சுயசார்பு, சுதேசி பயன்பாடு பலனளித்துள்ளது. பிரதமர் மோடி அனைவரையும் இணைந்து சுயசார்பு இந்தியா உருவாக்கும் பணியில் ஈடுபடுமாறு அழைத்தார்.
நாட்டு மக்களுக்கு நேரடி பயன்:
பிரதமர் மோடி உரையில், “ஜிஎஸ்டி குறைப்பு ஏழைகள், நடுத்தர மக்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் போன்ற அனைவருக்கும் நேரடி நன்மை தரும். மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்” என்றார். இது குறிப்பாக நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரச் சேமிப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
வர்த்தக நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி:
நடைமுறைச் சீர்திருத்தம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பொருளாதார முறையில் புதிய வாய்ப்புகளைத் தரும். பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்தால், இந்தியா உலகளவில் வேகமாக முன்னேறுவதாகவும், பொருளாதாரத் துறையில் சுயசார்பு நிலையை வலுப்படுத்துவதாகவும் வலியுறுத்தினார்.
இந்த புதிய அறிவிப்பு, நவராத்திரி விழா காலத்திலும் மக்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள், குடும்பங்களின் தினசரி தேவைகளுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர், வலைப்பதிவு
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.