தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.15 கோடி செலவில் தென்காசி மாவட்ட விளையாட்டு வளாகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு, கடந்த 14.09.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 400 மீட்டர் தடகள மைதானம், வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட மைதானங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன.
வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து, பழுத்தூக்குதல் போன்ற விளையாட்டுகளுக்கான அரசு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அவர்கள் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்காமல், வேறு பள்ளிகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் விளையாட்டு வளாகம் வெறிச்சோடிக் காணப்படுவதால், ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜே. அமல்ராஜ்,
மாவட்ட தலைமை நிருபர்,
தென்காசி.