Sun. Oct 5th, 2025


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் ஊராட்சியில் செயல்படும் நியாய விலை கடை விற்பனையாளரை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்லலகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட துலக்கான் குட்டை, பல்லலகுப்பம் ஆகிய இரண்டு கிராமங்களில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்லலகுப்பம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இக்கடையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனையாளராக பணிபுரிந்து வரும் மோனிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடையை நேரத்திற்கு திறக்காமல் தாமதமாக வருவது, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து பொருட்கள் வழங்குவது, அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களை தரம் பிரித்து வழங்குவது போன்ற குற்றச்சாட்டுகளை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், மோனிகாவை விற்பனையாளர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. “சமூக பிரச்சனைகள் உருவாகும் முன்னரே விற்பனையாளர் மாற்றப்பட வேண்டும்” என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

📰 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்


 

By TN NEWS