🙏 தொழிலாளி கைக்கு விபத்து – கம்பெனி உதவி மறுப்பு: மனிதாபிமான கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலையிலுள்ள நாச்சிபாளையம், பகவதி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (65) கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள அண்ணாமலையான் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர், தினக்கூலி வருமானத்தின் அடிப்படையில் தான் குடும்பச் செலவுகளை நடத்தி வந்தார். ஆனால் கடந்த 30/08/2025 அன்று வேலை செய்யும் போது, திடீரென அவரது கை மிஷினில் சிக்கி கடுமையாகக் காயமடைந்தது. மருத்துவர்கள் அவரது கை விரலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கம்பெனியில் பல ஆண்டுகள் உழைத்தும், இந்த ஆபத்தான விபத்துக்குப் பிறகும், கம்பெனி நிர்வாகம் எந்த உதவியும் செய்யவில்லை என்று மகேஸ்வரி வேதனை தெரிவித்தார்.
“நான் மிகவும் ஏழை நிலையில் இருக்கிறேன். சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு, எனது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் என் வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்படும்,” என்று கண்கலங்கிக் கூறினார்.
தொழிலாளியின் இந்த துயரத்தை கருத்தில் கொண்டு, கம்பெனி நிர்வாகம் உடனடியாக மனிதாபிமான மனப்பாங்குடன் செயல்பட்டு, அவருக்கு தேவையான மருத்துவச் செலவுகளையும் உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
✍️ செய்தி: சரவணக்குமார், திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு டுடே மூலமாக அரசு மற்றும் துறை அமைச்சருக்கு கோரிக்கை 🙏
தமிழகம் முழுவதும் சிறிய, பெரிய, தனியார், தொழில்துறை நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் உழைத்து வருகின்றனர். இவர்களின் உழைப்புதான் மாநில வளர்ச்சியின் அடிப்படைத் தூண்.
ஆனால், பணி நேரத்தில் ஏற்படும் விபத்துகள் காரணமாக பல தொழிலாளர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழக்கின்றனர் அல்லது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல நிறுவனங்கள் எந்தவித உதவியும் செய்யாமல் தொழிலாளிகளை புறக்கணிக்கின்றன என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.
எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து,
👉 தமிழகம் முழுவதும் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களுக்கான காப்பீட்டு (Insurance Policy) திட்டங்களை கட்டாயமாக எடுக்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்.
👉 மேலும், அந்தக் காப்பீடு தொழிலாளிகளுக்கு விபத்துகள், காயங்கள், சிகிச்சை செலவுகள், வாழ்வாதார இழப்பு போன்ற சூழ்நிலைகளில் பயனளிக்கும் வகையில் கட்டாயமாக கடை பிடிக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இத்தகைய சட்டப் பாதுகாப்பு இருந்தால், தொழிலாளர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். “தொழிலாளியின் வியர்வை வீணாகாது” என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் இது மிகப்பெரிய முன்னெடுப்பாக அமையும்.
தமிழ்நாடு டுடே சார்பில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அரசிடம் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 🙏
சேக் முகைதீன்
இணை ஆசிரியர் வலைப்பதிவு
தமிழ்நாடு டுடே செய்திகள்
சென்னை.