Sun. Aug 24th, 2025



தமிழ் சினிமாவின் பொற்காலத்தை நிர்மாணித்த பல கலைஞர்களில், நடிகர் டி. எஸ். பாலையா தனித்துவமான இடத்தை பிடித்தவர். வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் தன் உடல்மொழியாலும், வசன உச்சரிப்பாலும் தனி முத்திரையைப் பதித்தவர். அவரது நடிப்பு, வெறும் நடிப்பாக இல்லாமல், பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.


இளமைக்காலம் மற்றும் நாடக வாழ்க்கை;
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுண்டங்கோட்டை கிராமத்தில், 1912 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி பிறந்தவர் பாலையா. இவரது தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. சிறு வயதிலேயே நாடகத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த பாலையா, வீட்டை விட்டு வெளியேறி சர்க்கஸ் குழுவிலும், பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி போன்ற பல நாடக குழுக்களிலும் சேர்ந்து தனது நடிப்பு திறனை வளர்த்துக் கொண்டார். இந்த நாடக அனுபவம், பின்னாளில் அவர் சினிமாவில் எந்த வேடத்தையும் எளிதில் கையாள உதவியது.



திரைப்படப் பயணம்;
1936 ஆம் ஆண்டு, பிரபல இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கிய ‘சதி லீலாவதி’ திரைப்படம் மூலம் பாலையா திரையுலகில் அறிமுகமானார். இதே படத்தில் எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற பிரபலங்களும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்த பாலையா, ‘மதுரை வீரன்’, ‘தாய்க்குப்பின்தாரம்’, ‘திருவிளையாடல்’ போன்ற படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டினார். குறிப்பாக ‘திருவிளையாடல்’ படத்தில் அவர் ஏற்ற ‘ஹேமநாத பாகவதர்’ கதாபாத்திரம், அவரது கர்வம், ஆணவம், மற்றும் இறுமாப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது.



நகைச்சுவையில் தனி சாம்ராஜ்யம்
வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிய பாலையா, நகைச்சுவையிலும் தனது தனித்துவத்தை நிரூபித்தார். ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஊட்டி வரை உறவு’, ‘பாமா விஜயம்’, ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற படங்கள் இவரது நகைச்சுவை நடிப்புக்கு மிகச் சிறந்த உதாரணங்கள்.
• காதலிக்க நேரமில்லை’: இந்தப் படத்தில் அவர் கதை சொல்லும் காட்சி, தமிழ் சினிமாவின் நகைச்சுவை வரலாற்றில் ஒரு பொக்கிஷம். நாகேஷ் உடன் இணைந்து அவர் செய்த சேட்டைகள், வசன உச்சரிப்புகள், உடல்மொழி ஆகியவை ரசிகர்களை சிரிக்க வைத்து வயிறு புடைக்க செய்தது.
• ‘ஊட்டி வரை உறவு’: சிவாஜியின் தந்தையாக, ஒரு பக்கம் மனைவியையும், இன்னொரு பக்கம் மகனையும், நாகேஷையும் சமாளித்து அவர் ஆடிய நகைச்சுவை கபடி, தனித்துவமானது.


• ‘தில்லானா மோகனாம்பாள்’: இந்தப் படத்தில் மேளம் வாசிக்கும் கலைஞராக பாலையா நடித்தது, மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம். சிவாஜி, பத்மினி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த காட்சிகள், அவரது நடிப்பின் ஆழத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, ‘நலந்தானா’ பாடலில் சிவாஜியின் வாசிப்பில் மெய்மறந்து அவரை லேசாகத் தொடும் காட்சி, மிக அற்புதமான ஒரு நடிப்புத் தருணம்.



குணச்சித்திர நடிப்பில் உச்சம்;
வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்கள் தவிர, ‘பாகப்பிரிவினை’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் பாலையா தனது முத்திரையைப் பதித்தார். தன் தேர்ந்த நடிப்பால், ஒரு கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்துவதில் அவர் வல்லவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனே, டி. எஸ். பாலையாவும், எம்.ஆர். ராதாவும் தான் தான் மிகவும் வியந்த நடிகர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.



குடும்பம்;
பாலையாவுக்கு பத்மாவதி, லீலாவதி என இரண்டு மனைவிகள் இருந்தனர். இவருக்கு மனோசித்ரா என்ற மகளும், ஜூனியர் பாலையா என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரும் திரையுலகில் நடிகர்களாக அறிமுகமாகி உள்ளனர்.

டி. எஸ். பாலையா, வெறும் நடிகரல்ல, அவர் ஒரு கலைச்சாம்ராஜ்யம். அவரது நடிப்பு, பல தலைமுறைகளை கடந்து இன்றும் பேசப்பட்டு வருகிறது. 1972 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி தனது 59 வயதில் காலமானாலும், அவரது நடிப்பு, அவர் விட்டுச் சென்ற நகைச்சுவை மற்றும் கலைப் பொக்கிஷங்கள், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றென்றும் வாழும்.



உ.விக்னேஷ்வர்

சென்னை

By TN NEWS