Wed. Aug 20th, 2025

 

*சமத்துவம் மலரட்டும்*
*சமுதாயம் சிறக்கட்டும்*

மனிதனாக பிறந்த அனைவருக்குமே *ஜனனம்* என்பதும் சரி, *மரணம்* என்பதும் சரி ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருக்கும்  பொதுவானது.
அந்த வகையில் மரணத்தோடு தினசரியும் இந்த உலகமே மறைமுகமாக போராடிக் கொண்டேதான்  இருக்கின்றது. இதில் முந்துபவர் யார்?
தாமதிப்பவர் யார்? என்பதுதான்
புரியாத புதிர்.

என்னைவிட உயர்ந்தவன் இருக்கிறான் என்று தாழ்த்தப்பட்டவன் எண்ணிக் கொள்கிறான்; என்னைவிடத் தாழ்ந்தவன் இருக்கிறான் என்று உயர்ந்த நிலையில் உள்ளவன் எண்ணிக் கொள்கிறான்; இரண்டுமே நல்லதல்ல, *உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதே தவறு*. *சுயமரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம் என்றார் டாக்டர் அம்பேத்கர் ஐயா அவர்கள்*…

மேலும் *விவேகம் என்னும் வெள்ளி முளைத்து சாதி, மதம் எனும் சனி தொலைந்தால்தான்*.
*சமத்துவம் என்னும் ஞாயிறு பிறக்கும் என்றார்  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி* ஐயா அவர்கள். ஆம் அதனால்தான்  பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வகுத்த பாதையில், பேரறிஞர் அண்ணாவின் வழியில் *சமத்துவபுரத்தை உருவாக்கினார்*…

சமத்துவத்தின் மகத்துவம் என்னவென்றால் சமத்துவமானது
*சமூக நீதியை* நிலைநாட்ட உதவுகிறது. சமத்துவமானது சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குகிறது. சமத்துவமானது அனைவரின் திறமைகளையும் வெளிப்படுத்தவும், சமூக வளர்ச்சிக்கு, சமூக மேன்மைக்கு ஆக்கபூர்வமான முன்னேற்பாடுகளுக்கு 
பங்களிப்பு செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. மொத்தத்தில் சமத்துவமானது மனித உரிமைகளைப் பாதுகாக்கிறது மற்றும் மேம்படுத்துகிறது.

அந்த வகையில் அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில், *”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”* என்ற அடியில், எல்லா மனிதர்களும் பிறப்பால் சமம் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது, ஒருவரின் பிறப்பு அல்லது ஜாதி எதுவாக இருந்தாலும், அனைவரும் சமமானவர்கள் என்பதே திருக்குறளின் அடிப்படை கருத்து இதை ஏற்றுக் கொள்ளாமல் மனிதன் என்னும் போர்வையில் மிருகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்றைய சமூகத்தில் வாழும் இளைஞர்கள்.

நமது முன்னோர்கள் சைவம் மற்றும் வைணவம் என்கின்ற ஆன்மீகத்தின் வழியிலும் சமத்துவத்திற்காக போராடியுள்ளார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது ஆம், *நாயன்மார்கள்* என்பவர்கள், சைவ சமயத்தில் போற்றப்படும் அறுபத்து மூன்று அடியார்களைக் குறிக்கும். இவர்கள் சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள், *நாயன்மார்களின் வரலாற்றை சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் காணலாம்.*
நாயன்மார்களில் தாழ்ந்தவர்கள் என்று எவரையும் குறிப்பிட முடியாது. நாயன்மார்கள் அனைவரும் சமமானவர்களாகவும், சிவபெருமானின் மீது பக்தி கொண்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இருப்பினும், *”திருநாளைப்போவார்” என்று அழைக்கப்படும் நந்தனார்*, ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்திருந்தாலும், அவரது ஆழ்ந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.

*ஆழ்வார்கள்* என்பவர்கள், வைணவ சமயத்தில் திருமாலின் மீது மிகுந்த பக்தி கொண்ட பன்னிரு அடியார்கள் ஆவர். அவர்கள் தமிழில் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு, நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. ஆழ்வார்கள் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்தணர், அரசர், தாழ்ந்த குலத்தில் பிறந்தவர், கள்வர் என பல குலங்களைச் சேர்ந்தவர்கள் ஆழ்வார்கள் ஆவார்கள்.
முதலாழ்வார்கள் எனப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரும் மற்றும் திருமழிசையாழ்வார்  தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
மேலும் *ராமானுஜர் குல வேறுபாடுகளைக் கருதாமல், அனைத்து மக்களும் கோவில்களுக்குள் நுழையவும், வழிபாடுகளில் பங்கேற்கவும் வழி செய்தார்*. அவர் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபட்டார், தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்களை கோவில்களில் சேர்த்து அவர்களை இறைவனின் பக்தர்கள் என்று கூறினார்.
மேற்காணும் ஆன்மீக வரலாறை நாம் படிக்கும் பொழுது அன்றைய சமூகத்தில் வாழ்ந்த மக்கள் இன்றைய சமூகத்தில் வாழும் மக்களைப் போல மிருகத்தனமாக ஆணவ படுகொலை செய்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை,

மேலும் மிகச் சிறந்த மிகச்சிறந்த அரசியல்வாதியாகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஆன்மீகவாதியாகவும் மற்றும் *மனிதநேயப் பண்பாளராக திகழ்ந்த முத்துராமலிங்கம் ஐயா* அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் பிறந்தார்.
அவர் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அடிக்கடி வழிபாடு செய்தார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களும் கோயில்களுக்குள் நுழைய வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் ஆலயப் பிரவேசப் போராட்டங்களில் பங்கேற்றார். மேலும், அவர் தனது சொத்துக்களை கோயில்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எழுதி வைத்தார். அவரது பிறந்த நாளான அக்டோபர் 30 ஆம் தேதி, தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மக்கள் பலரும் கோயில்களுக்கு சென்று தெய்வத்திற்கு சமமாக வழிபாடு செய்கிறார்கள்.

*இன்றைய இளைஞர்கள் ஜாதி தலைவர்களின் பின் செம்மறியாடு போல கண்மூடித்தனமாக  சிந்திக்காமல் செல்லாமல்*, தான் உயர்ந்த ஜாதி என்று ஆணவம் கொள்ளாமல் *காதல் திருமணம் செய்பவர்களை ஆடுகளைப் போல ஆணவ படுகொலை செய்யாமல்,*
உயர்வு தாழ்வு வேதம் இன்றி சமூக மேன்மைக்கு பாடுபட வேண்டும்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்,
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கின்ற சமத்துவ சித்தாந்தத்தை மனதில் ஏற்ற வேண்டும் என்பதே ஞானச்சித்தன் ஆகிய எனது வேண்டுகோள் ஆகும்.

*வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்*
*பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறம் ஆகும்.*

*சாம்பல் நிறத்தொரு குட்டி கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி*
*பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி.*

*எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ இந்த நிறம் சிறிதென்றும்*
*இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ.*

*வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை*
*எண்ணங்கள் செய்கைகள் யாவும் இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!*

மேற்காணும் பாடலின்  வாயிலாக “வெள்ளை நிறத்தொரு பூனை” என்பது பாரதியார் எழுதிய பாடல் வரிகளில் ஒன்று. இது, எங்கள் வீட்டில் ஒரு வெள்ளை நிறப் பூனை வளர்கிறது, அது பெற்ற குட்டிகள் வெவ்வேறு நிறங்களில் உள்ளன, ஆனாலும் அவை அனைத்தும் ஒரே தரமானவை என்று கூறுகிறது. இதன் மூலம், நிற வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களும் சமமானவர்களே என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

*சாதிகள் இல்லையடி பாப்பா!- குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;* *நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர்.* என்று மகாகவி பாரதியார் அவர்கள் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி பாடினார் ஆனால் இன்றைய இளைஞர்களின் செயல்பாடுகளை வைத்து பார்க்கும் போது *ஜாதிகள் உள்ளதடி பாப்பா,மூடர்களின் மூலையில் டாப்பா,* *கூறுபட்டு கிடைக்குது நாடு,கூறுகெட்ட எவனோ போட்ட கோடு*
என்று சமூகப்பற்றாளன் ஆகிய எனக்கு பாடத் தோன்றுகிறது…

*யாராக இருந்தாலும் சரி முதலில் நாம் என்ன ஜாதிக்கு பிறந்தோம்* *என்பதை அடியோடு மறந்து விட்டு, நாம் என்ன சாதிக்க பிறந்தோம் என்பதை மனதில் நினைக்க வேண்டும்,*
அப்துல் கலாம் ஐயா கண்ட இந்தியா வல்லரசு நாடாகும் கனவை இன்றைய இளைஞர்கள் நனவாக்க வேண்டும்…

மொத்தத்தில்;


*வேற்றுமையில் ஒற்றுமை* என்கின்ற உயர்ந்த பண்பாடு அடுத்தடுத்த தலைமுறை *இளைஞர்களின் மனதில் நங்கூரமிட்ட கப்பலாக நிலைக்கட்டும்.*
நம் மண்ணில்
*சமத்துவம் மலரட்டும்*
*சமுதாயம் சிறக்கட்டும்.*

( சிந்தனை தொடரும் )

✍️

*சமூகப்பற்றாளன் ஞானச்சித்தன்*

7598534851

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

தொகுப்பு:

R. சுதாகர் – துணை ஆசிரியர்

Tamilnadu Today Media Networking.

 

By TN NEWS