Thu. Aug 21st, 2025




கன்னியாகுமரியில் காவல்துறை தடையை மீறி நடந்த கவன ஈர்ப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்காக குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த அனுமதியை பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடாக மணல் அள்ளியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ எம்எல் ரெட்ஸ்டார், லோக் ஜனசக்தி கட்சி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த முறைகேட்டைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமலாக்கத்துறை இயக்குனருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.


மனுவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு முன்பு, எடுக்கும் போது, எடுத்த பின் ஆகிய அனைத்து நிலைகளிலும் புகைப்படங்களை பதிவு செய்யும் முறைமை அமல்படுத்தப்பட வேண்டும்.

அனுமதி பெற்ற நிலங்களில் மணல் கொட்டும் முன், கொட்டும் போது, கொட்டிய பின் ஆகிய புகைப்படங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

எந்த குளங்களில் எவ்வளவு யூனிட் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது, எவ்வளவு எடுக்கப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக அளவீடு செய்து வெளியிட வேண்டும்.

அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புக்கான பொறுப்பு மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை பொறியாளர்கள், வட்டாட்சியர்கள் உட்பட அதிகாரிகளின் மீது நிர்ணயிக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும்.

வண்டல் மண் எடுப்பதற்காக அனுமதி வழங்கப்பட்ட சர்வே எண்களை விவசாய நிலமாகவே அரசிதழில் அறிவித்து, அதை வீட்டு மனைக்கு மாற்ற அனுமதிக்கக் கூடாது.

இதற்கான ஆணையை DTCP, உள்ளாட்சித் துறை, நீர்வளத்துறை, பத்திரப் பதிவுத்துறை, வருவாய் துறை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.

தடையை மீறிய போராட்டம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி தலைமை தபால் நிலையம் முன்பு  (15.08.2025) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் காவல்துறை தடைவிதித்திருந்தது. எனினும், கட்சியினர் அதனை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தலைவர்கள் பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ எம்எல் ரெட்ஸ்டார் மாவட்டச் செயலாளர் தோழர் மணவைகண்ணன் தலைமையில்ச் செயல்பட்டார்.
விசிக மாவட்டச் செயலாளர் அல்காலித், லோக் ஜனசக்தி மாவட்டத் தலைவர் தர்மகண்ணு, விடுதலை தேசம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் தலைவர்கள் தனேஷ், ராஜ்மோகன், புஷ்பம், கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மொத்தம் 47 பெண்கள், 13 ஆண்கள் என 60 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.




✍️ சேக் முகைதீன்
இணை ஆசிரியர்

 

By TN NEWS