Tue. Aug 26th, 2025

நத்தம் பட்டா பிரச்சனை – தென்காசியில் சிபிஐ எம்எல் கட்சி போராட்டம்!

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், சிபிஐ எம்எல் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 75-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 2007-இல் வழங்கப்பட்ட நத்தம் நிலவரித் திட்ட இலவச பட்டாக்கள், சமீபத்தில் கணினி மயமாக்கப்பட்டபோது எவ்வித முன்னறிவிப்புமின்றி சர்க்கார் புறம்போக்காக மாற்றப்பட்டு, குடியிருப்பு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை கண்டித்து, உடனடியாக கணினி மயமாக்கப்பட்ட இலவச பட்டா வழங்கிட மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட வேண்டும் என கோரி மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் மற்றும் எம்.எல்.ஏ திரு. வேல்முருகன், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொதுமக்களுடன் பேசினார்.

போராட்டத்திற்கு சிபிஐ எம்எல் தென்காசி மாவட்ட நிலைக் குழு உறுப்பினர் மற்றும் AIPWA மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தோழர் ஜி. பிச்சைமணி, சிவகிரி பேரூராட்சி சிபிஐ எம்எல் செயலாளர் சண்முகசுந்தரம் (பழனி) ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தில் ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட பொதுச் செயலாளர் எம். வேல்முருகன், சிபிஐ எம்எல் மாவட்ட குழு உறுப்பினர்கள் என். முருகன், பொட்டுச்செல்வம், வேலம்மாள், முத்துலட்சுமி, ஆலங்குளம் தாலுகா குழு உறுப்பினர் பரமசிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், ஆகஸ்ட் 20-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்கப்படும் வரை குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

– ஜோ. அமல்ராஜ், தலைமை செய்தியாளர், தென்காசி மாவட்டம்

 

By TN NEWS