Wed. Aug 20th, 2025

ஜூலை 26 – குடியாத்தம்

ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த முத்தியார் அகமது, ஆந்திர மாநிலம் சித்தூரில் பிரியாணி கடை வாடகைக்கு எடுக்கச் செல்லும்போது ரூ.2.5 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றார். அவருடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நூர்தீன் (31) இருசக்கர வாகனத்தில் சென்றார்.

சித்தூரில் இருந்து திரும்பும் வழியில், முத்தியார் தனது பணப்பையை நூர்தீனிடம் கொடுத்தார். பரதராமி சோதனைச்சாவடி அருகே சென்றபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், நூர்தீன் கையில் இருந்த பணப்பையை பறித்து மின்னல் வேகத்தில் தப்பினர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், நூர்தீன் பதில்களில் முரண்பாடு இருப்பதை உணர்ந்து தீவிரமாக விசாரித்தனர். அதில், நூர்தீன் தனது அண்ணன் முகமது பாஷா மற்றும் அவரது நண்பர் ராமமூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து பணத்தை பறிக்க சதி செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.

ராமமூர்த்தி, தனது நண்பர்கள் பேரரசு மற்றும் மற்றொருவரை அனுப்பி, பையை பறிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

பரதராமி போலீசார், முத்தியாரின் புகாரின் பேரில் நூர்தீன், முகமது பாஷா, ராமமூர்த்தி, பேரரசு மற்றும் இன்னொருவர் ஆகிய 5 பேர்மீது வழக்கு பதிவு செய்து, நூர்தீனை கைது செய்தனர். மற்ற 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்.

By TN NEWS