வெளிமாநில NEET தேர்வு மையங்களை ரத்து செய்ய வலியுறுத்தல் – சுகாதார அமைச்சருக்கு சச்சிதானந்தம் எம்.பி. கடிதம்
தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம், 2025ஆம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (NEET-PG) தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட வேண்டும் என, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டாவிடம் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பயணச் சிரமம், செலவுகள், மன அழுத்தம் போன்ற பல பாதிப்புகள் மாணவர்களுக்கு ஏற்படுகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.
இது போன்ற நிலைமைகள் கடந்த 2024 ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது. அப்போது தனக்கு வந்த மாணவர் புகார்களின் பேரில், உடனடி நடவடிக்கை எடுத்து, வெளிமாநில மையங்களை மாற்றி, தமிழகத்திலேயே தேர்வு மையம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், அதனையே தற்போது மீண்டும் செய்ய வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் – சரவணக்குமார்.