போயம்பாளையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: கண்காணிப்பை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர் கோரிக்கை
திருப்பூர், மார்ச் 30:
திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் சக்தி நகரில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், பொது மக்களிடையே அதிக அச்சம் உருவாகியுள்ளது. இவ்விளக்கத்தில், சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன், காவல்துறையினரை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மார்ச் 26ஆம் தேதி, சக்தி நகரின் 3ஆம் வீதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால், இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. இதன் மறுநாளே, மார்ச் 27ஆம் தேதி, சக்தி நகரில் அரசு பள்ளி வீதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் உரிய அனுமதியின்றி வாகனத்தை எடுத்துச் சென்றது பதிவாகியுள்ளது. மேலும், மார்ச் 26ஆம் தேதி திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரே, மறுநாளில் வாகனத்தையும் திருடிச் சென்றுள்ளார் என சிசிடிவி காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த சம்பவங்கள் குறித்து சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கருத்து தெரிவித்ததாவது:
“சக்தி நகரில் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் திருட்டு நடந்த வீடுகளுக்கு அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டபோது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் அடிக்கடி சுற்றித் திரிந்திருப்பது தெரியவந்துள்ளது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து நேரும் முன்னர், தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபடும் நபர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும். குறிப்பாக, அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் பரந்து விரிந்து காணப்படுவதால், போயம்பாளையத்தில் புதிதாக காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாகன சோதனைச் சாவடியை முறையாக செயல்படுத்தி, ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி, குற்றச்செயல்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.
பொது மக்களின் பாதுகாப்பு கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம் செய்தியாளர்.