திருப்பூரில் மின் கம்பம் முறிந்து விழுந்து ஊழியர் படுகாயம் – அரசு நடவடிக்கை எடுக்குமா?
திருப்பூர், மார்ச் 26:
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காமராஜ் சாலையில் மின் பழுது சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர், பழுதடைந்த மின் கம்பம் முறிந்து கீழே விழுந்ததால் படுகாயமடைந்தார்.
பணி செய்த போது திடீர் விபத்து
திருப்பூர் தெற்கு பகுதியிலுள்ள டவுன்ஹால் மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த சண்முகவடிவேல் (32), பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 3 ஆண்டுகளாக மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு மனைவி மற்றும் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காமராஜ் சாலையில் உள்ள பழுதடைந்த மின் கம்பத்தில் ஏற்பட்ட மின் தடையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டபோது, மின் கம்பம் திடீரென முறிந்து கீழே விழுந்தது. இதில் சண்முகவடிவேலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
சம்பவத்தையடுத்து, அவரை ஊத்துக்குளி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டது. ஆனால், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் வழக்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், அவசர அவசரமாக அவரை சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மின் வாரியத்தின் அலட்சியம்?
மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட காமராஜ் சாலையில் மின் கம்பங்கள் சரியாக பராமரிக்கப்படாததால், பலத்த காற்றில் கூட முறிந்து விழும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது. பல மின் கம்பங்களில் சிமெண்டு அடிப்பகுதி முறிந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் மின் துண்டிப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
உரிய நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?
இதுகுறித்து திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
“திருப்பூரில் பல இடங்களில் மின் கம்பங்கள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, பழுதடைந்த மின் கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும். மேலும், பணியில் காயமடைந்த மின்வாரிய ஊழியருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நிவாரணம் வழங்கவும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
நமது செய்தியாளர் சரவணக்குமார்

