Tue. Jul 22nd, 2025

திருச்செந்தூர் முருகன் கோயில் மேலைக் கோபுரம் – சீதக்காதி வழங்கிய தங்க உதவி

திருச்செந்தூர் முருகன் கோயில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது என போற்றப்படும் புனிதத் தலமாகும். இத்தலத்தில் அமைந்துள்ள மேலைக் கோபுரம் அதன் சிறப்புகளில் முக்கியமானது. இந்த கோபுர திருப்பணியில் ஏற்பட்ட ஒரு விசித்திரமான சம்பவம், கோயில் வரலாற்றில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பணி நின்றது – முருகன் கனவில் தோன்றினார்

மேலைக் கோபுரத்தின் கட்டிட வேலைகளை திருவாடுதுறை ஆதீன ஒடுக்கத்து தம்பிரான் தேசிக மூர்த்தி சுவாமிகள் முன்னிலை வகித்தார். ஒன்பது நிலைகளைக் கொண்டதாக திட்டமிடப்பட்ட கோபுரம், ஆறு நிலைகள் கட்டிய பிறகு பொருள் பற்றாக்குறை காரணமாக வேலை நின்றுவிட்டது. இதனால், தேசிக மூர்த்தி சுவாமிகள் மிகுந்த கவலையடைந்தார்.

அவரது கவலைக்குத் தீர்வு தரும்படி முருகப்பெருமான் அவருடைய கனவில் தோன்றி, வள்ளல் சீதக்காதி அவரிடம் செல்லும்படி உத்தரவிட்டார்.

சீதக்காதியின் பொன் கொடை

தேசிகர் முருகப்பெருமானின் திருவுளப்படி வள்ளல் சீதக்காதி (ஷெய்க் அப்துல் காதர் மரைக்காயர்) அவரைச் சந்திக்க காயல்பட்டினம் சென்றார். அங்கு, சீதக்காதி அவர்களின் வரலாற்றை கேட்டதும், உடனடியாக ஒரு மூட்டை உப்பை வழங்கி, “இதை கோயிலில் சென்று அவிழ்த்துப் பாருங்கள்” எனக் கூறினார்.

தேசிகர் திருச்செந்தூர் திரும்பி, கோயிலில் அந்த உப்பு மூட்டையை அவிழ்த்தார். அப்போது அதிலிருந்து ஏராளமான தங்கக் காசுகள் வெளிவந்தன. அவற்றைப் பயன்படுத்தி, மேலைக் கோபுரத்தின் முழுமையான திருப்பணியும் வெற்றிகரமாக முடிந்தது.

இது மத நல்லிணக்கத்தின் ஓர் உண்மைப் பிரதிபலிப்பு

இச்சம்பவம், முருகப்பெருமானின் திருவருளையும், மத நல்லிணக்கத்தின் உண்மைப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மிகப்பெரிய உதாரணமாக கருதப்படுகிறது. முருகப் பக்தர்களும், ஈசுலாமிய சமூகத்தினரும், தெய்வ நம்பிக்கையோடு ஒன்றிணைந்து கோயிலின் மேலைக் கோபுரத்திற்காக உதவியிருக்கிறார்கள் என்பது வரலாற்றில் ஒரு சிறப்பு குறிப்பாகும்.

இச்சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல் திருச்செந்தூர் தேவஸ்தானத்தினால் வெளியிடப்பட்ட “திருச்செந்தூர் கோயில் வரலாறு” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆதாரம்: “திருச்செந்தூர் கோயில் வரலாறு” – திருச்செந்தூர் தேவஸ்தான வெளியீடு)

தென்காசி மாவட்டம் முதன்மை செய்தியாளர்.

அமல்ராஜ்

By TN NEWS