Thu. Jun 4th, 2026

அரசு ஊழியரை கத்தியால் வெட்டிய கொடூரம்; கைது கோரி மனைவி, குழந்தைகளுடன் சாலை மறியல்.

வத்தலகுண்டு, ஜூன் 2:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது, போதையில் இருந்த ராணுவ வீரர் மற்றும் அவரது நண்பர் இணைந்து அரசு ஊழியரை கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, பாதிக்கப்பட்டவரின் மனைவி தனது மூன்று குழந்தைகளுடன் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெண்களிடம் கேலி; தட்டிக் கேட்ட அரசு ஊழியர் மீது தாக்குதல்.

வத்தலகுண்டு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மாறுவேடமிட்டு ஊர்வலமாக வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் முத்துராமன் மற்றும் அவரது நண்பர் பிரசன்னா ஆகியோர் மதுபோதையில் அப்பகுதி பெண்களிடம் கேலி, கிண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை அரசு ஊழியரான கருப்பையா தட்டிக்கேட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்பையாவின் தலை மற்றும் உடல் பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை.

தாக்குதலில் பலத்த காயமடைந்த கருப்பையா, உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் மீது லஞ்சப் புகார்.

சம்பவம் தொடர்பாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், குற்றவாளிகளை கைது செய்வதில் போலீசார் தாமதம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி பூமாதேவி குற்றம்சாட்டினார்.

மேலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக சிலர் செயல்படுவதாகவும், போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குழந்தைகளுடன் தர்ணா போராட்டம்.

இதைக் கண்டித்து பூமாதேவி தனது மூன்று குழந்தைகளுடன் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பூமாதேவி மற்றும் அவரது குழந்தைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

மக்கள் கோரிக்கை…!

இந்த சம்பவம் வத்தலகுண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

– தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.

By TN NEWS