Thu. Apr 23rd, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகிலுள்ள போதமலை பகுதியில் முக்கியமான மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்த போதமலையில், கீழூர், மேலூர், கெடமலை என மூன்று கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிக்கு இதுவரை முறையான சாலை வசதி இல்லாததால், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் தேர்தல் உபகரணங்கள் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் தலைச்சுமையாக சுமந்து கொண்டு செல்லப்பட்டு வந்தன.

சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக ஒற்றையடி பாதையில் நடந்து செல்வது வழக்கமாக இருந்தது. இது அதிகாரிகளுக்கும், தேர்தல் பணியாளர்களுக்கும் மிகுந்த சிரமத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக இத்தகைய முறையிலேயே தேர்தல் பணிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சமீபத்தில் அப்பகுதியில் மண் சாலை அமைக்கப்பட்டதால், இந்த தேர்தலில் முதல் முறையாக வாகனங்கள் மூலம் EVM-கள் மற்றும் பிற உபகரணங்கள் போதமலை கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த மாற்றம் தேர்தல் பணியாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்ததுடன், அப்பகுதி மக்களின் நீண்டநாள் சாலை வசதி கோரிக்கைக்கும் தீர்வாக அமைந்துள்ளது.

ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த முன்னேற்றம், ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்.

By TN NEWS