Tue. Apr 7th, 2026

குதிரை வண்டியில் வேட்புமனு தாக்கல் – திருப்பத்தூரில் அமமுக வேட்பாளர் வித்தியாச பிரச்சாரம்!

திருப்பத்தூர், ஏப்ரல் 6:

தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில், திருப்பத்தூர் தொகுதியில் வித்தியாசமான தேர்தல் காட்சி ஒன்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானசேகர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய குதிரை வண்டியில் வந்தது நிகழ்வை சிறப்பாக்கியது.

இந்த நிகழ்வில் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரான டி.கே. ராஜா குதிரை வண்டியை ஓட்ட, அதில் வேட்பாளர் ஞானசேகர் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் ‘குக்கர்’ சின்னத்திற்கு வாக்கு கோரி சென்றார்.

இந்த வித்தியாசமான ஊர்வலம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

தேர்தல் பரப்புரையில் இத்தகைய புதுமையான அணுகுமுறைகள் அதிகரித்து வருவது, இம்முறை தேர்தலில் கடுமையான போட்டி நிலவுவதை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

சதீஷ்குமார், திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்
ஒளிப்பதிவாளர்: ரகுநாதன்

By TN NEWS