Mon. Mar 23rd, 2026

சின்னம்மா கட்சியில் இணைந்த கண்ணபிரான் அரசியல் நகர்வு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த பெரும்பாடி கிராமத்தை வசிப்பிடமாக கொண்ட மாஸ்டர் என். கண்ணபிரான், அமமுக (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) கட்சியில் இருந்து விலகி, அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து, குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

அமமுக கட்சி தொடங்குவதற்கு முன்பே தீவிர ஆதரவாளராக இருந்து, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் தொழில்நுட்ப பிரிவில் (IT Wing) மாவட்ட பொறுப்பில் செயல்பட்டு வந்த கண்ணபிரான், தனது கட்சிப் பணிகளால் குறிப்பிடத்தக்கவர். அவரது செயற்பாட்டை பாராட்டி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக டி.டி.வி. தினகரன் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எடப்பாடி தலைமையிலான அணியுடன் இணைந்து NDA கூட்டணிக்கு சென்றதைத் தொடர்ந்து, புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் செயல்படும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லம் முகாம் அலுவலகத்தில், குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் நோக்கில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

கம்யூனிஸ்ட் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த கண்ணபிரான், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழியிலான அரசியல் செயல்பாடுகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். மேலும், சின்னம்மாவின் வரவிருக்கும் சுற்றுப்பயணத்தின் போது நூற்றுக்கணக்கான எம்.ஜி.ஆர். ஆதரவாளர்களை கட்சியில் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்

By TN NEWS