Sun. Mar 15th, 2026

61 கடைகளில் சோதனை – ரூ.2.25 லட்சம் அபராதம் விதிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம்:
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், விதி மீறலில் ஈடுபட்ட கடைகளுக்கு மொத்தம் ரூ.2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சோதனை.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமபாண்டியன் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன், சக்திமுருகன், ரவி, பிரவீன் ரகு ஆகியோர் இணைந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

பல பகுதிகளில் கடைகள் ஆய்வு.

நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளை மையமாகக் கொண்டு
ஒழுகினசேரி, நாகர்கோவில், ஆலங்கோடு, மேல்புறம், புண்ணியம், அருமனை, அம்பலக்கடை, வெள்ளக்கடவு, மயிலோடு, சரலூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 61 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.

தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்.

சோதனையின் போது 6 கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட “கணேஷ்” புகையிலை மற்றும் மெல்லும் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் பொதுமக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்றாவது முறையாக சிக்கிய விற்பனையாளர்….?

குறிப்பாக, ஒரே விற்பனையாளர் மூன்றாவது முறையாக தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை விற்பனை செய்தது கண்டறியப்பட்டதால், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதி மீறலில் ஈடுபட்ட மற்ற 5 கடைகளுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தமாக ரூ.2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டுகோள்…!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்கும் முயற்சியில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுபோன்ற சட்டவிரோத விற்பனை குறித்து தகவல் தெரிந்தால்

🔷94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள் 🔷

சமூக பாதுகாப்பு நோக்கில் நடவடிக்கை….!

புகையிலை பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இதன் பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் நாடு டுடே – கன்னியாகுமரி மாவட்டம்
செய்தியாளர்: ஷாலு V. J.

By TN NEWS