தருமபுரி மாவட்டம் | மக்கள் செய்தி
தருமபுரி மாவட்டம் வளர்ச்சியில் சில பகுதிகளில் இன்னும் சமூக விழிப்புணர்வு குறைவாக உள்ள நிலையில், மூடநம்பிக்கைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்க்க்கு உட்பட்ட பொம்மிடி பகுதியில், போலி ஜோதிடர்கள், வசியம், பரிகாரம், ஜாதக கணிப்பு, தொழில் முன்னேற்றம், உடல் நலம் போன்றவற்றை காரணமாகக் கொண்டு பணம் மற்றும் நகைகளை பெற்றுக்கொள்ளும் மோசடிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
பொதுமக்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, அச்சம் ஏற்படுத்தும் தகவல்களை கூறி, பரிகாரம் மற்றும் பூஜை என்ற பெயரில் அதிகளவு பணம் வசூலிப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், ஜோதிடம் அல்லது ஆன்மீக ஆலோசனை வழங்குவோர் முறையான கல்வி பயின்றவர்களா, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் பதிவு செய்யப்பட்டவர்களா, அவர்களது அனுபவம் எவ்வளவு என்பதையும் பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அதேபோல், ஆன்லைன் மூலம் ஜோதிடம் பார்க்கும் போது, அந்த இணையதளம் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட (GST உள்ளிட்ட) நிறுவனமா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
எனவே, போலி ஜோதிடர்கள் மற்றும் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் மோசடி செயல்கள் குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் கவனம் செலுத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகத்தின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஆதாரமற்ற பரிகாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
👉 விழிப்புணர்வே மோசடிகளுக்கு எதிரான முதல் பாதுகாப்பு என்பதே இந்த சமூக எச்சரிக்கையின் பதிவு.
ராஜீவ்காந்தி
மண்டல செய்தியாளர்
