Sat. Jan 10th, 2026


திருப்பூர் / திண்டுக்கல் :

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையத்தில் அமைந்துள்ள குமரன் குன்று முத்துகுமாரசாமி (முருகன்) கோவிலை அகற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை அவமதித்து கோவிலை இடித்ததாக குற்றம்சாட்டி, திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெற்ற சம்பவத்தின் போது மாநிலத் தலைவர் மீது பலப்பிரயோகம் செய்த காவல்துறை அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் எனும் ராஜசேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து, அய்யலூரில் உள்ள M.P. மஹால் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு டுடே செய்திகளுக்காக
சித்திர பிரகாஷ்




By TN NEWS