டிசம்பர் 31
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி சோதனைச் சாவடி அருகே, ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ கஞ்சாவை பரதராமி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆந்திர–தமிழக எல்லையில் அமைந்துள்ள பரதராமி சோதனைச் சாவடியில் பரதராமி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்,
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (35) மற்றும்
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (44) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரிடமும் பரதராமி போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்.


