Sun. Jan 11th, 2026

டிசம்பர் 29, 2025 | திண்டுக்கல்

மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து, மலை வேடன் (பழங்குடியினர்) சமூகத்தினருக்கு இனச் சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்து, 50-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளைக் கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் பழனி, வேடசந்தூர், பரசுராமபுரம், கம்பளியம்பட்டி, மெத்தம்பட்டி, வைவேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலை வேடன் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும், மலை வேடன் சமூகத்தினருக்கு இனச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மனித உரிமை ஆணையம் & நீதிமன்ற உத்தரவு – மீறல் குற்றச்சாட்டு:

இந்த விவகாரத்தில், 2007 ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையம், இப்பகுதியில் வாழும் 1,078 நபர்களுக்கு பழங்குடியினர் இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், அந்த உத்தரவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், நீலவேணி என்பவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், மதுரை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் (2025) அவருக்கு பழங்குடியினர் இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அந்த நீதிமன்ற உத்தரவும் மாவட்ட நிர்வாகத்தால் அமல்படுத்தப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

போராட்டக்காரர்கள் கோரிக்கை:

மலை வேடன் சமூகத்தினருக்கு உடனடியாக இனச் சான்றிதழ் வழங்க வேண்டும். மனித உரிமை ஆணையம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மேலும் தாமதம் செய்தால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்
என்று எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.


செய்தியாளர்
சித்திர பிரகாஷ்

By TN NEWS