Sun. Jan 11th, 2026

மதுரை, டிசம்பர் 21:

தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நல சங்கத்தின் மாநில அவசர செயற்குழு கூட்டம், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று நடைபெற்றது.
சங்கத்தின் நிறுவனர் திரு. இரவிசங்கர் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

விடுதி நிர்வாகச் சிக்கல்கள் குறித்து விவாதம்:

கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் நிலவி வரும் நிர்வாக சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதில்,
மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடி அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய திரு. மகேந்திரன் அவர்களுக்கு கூடுதல் விடுதி பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், கடந்த நான்கு மாதங்களாக அவர் செலவு செய்த உணவுக் கட்டணம் வழங்கப்படாத நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் குறித்து உறுப்பினர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தனர். அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

விடுதிகளில் மாணவர்களின் உணவுக்காக நடை முறைப்படுத்தப்பட்டுள்ள பயோ மெட்ரிக் முறை தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக சிக்கல் ஏற்படுத்துவதாக கூறி, அந்த முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரப்பட்டது.

விடுதி காப்பாளர்கள் மாணவர்களின் உணவுக்காக செலவு செய்த தொகை கடந்த நான்கு மாதங்களாக அரசு வழங்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் காப்பாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால், உணவுக் கட்டணத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது ஒரு மாணவனுக்கு மாதம் ரூ.1400 வழங்கப்படும் உணவுக் கட்டணம், தற்போதைய விலைவாசியுடன் ஒப்பிடுகையில் போதுமானதாக இல்லை எனக் கூறி, அதை ரூ.2500 ஆக உயர்த்த வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்தது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளில், இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், ஆசிரியர்கள் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, புதிய பணியிடங்களை உருவாக்கி உடனடி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாணவர்களின் விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால் போதிய பயிற்சி வழங்க இயலவில்லை. ஆகவே, புதிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பங்கேற்பாளர்கள்:

இக்கூட்டத்தில்,

மாநிலத் தலைவர் திரு. கணேசமூர்த்தி

மாநில பொதுச்செயலாளர் திரு. பாஸ்கர்

மாநில பொருளாளர் திரு. பாலச்சந்தர்

மற்றும் மாநில நிர்வாகிகள் ஈஸ்வரன், செல்வக்குமார், மோகன்ராஜு, சேகர், திருநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

மேலும்,
கடலூர், மதுரை, தூத்துக்குடி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வீர சேகர்
மதுரை மாவட்டம்

By TN NEWS