Sun. Jan 11th, 2026

செங்கல்பட்டு மாவட்டம் | வண்டலூர் | 20.12.2025

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசடி ஆவணங்களின் அடிப்படையில் போலி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவங்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் இன்று அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது, சமூக விரோதிகளுக்கு துணை நின்று சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் வட்டாட்சியர் திருமதி பூங்கொடி, முன்னாள் சர்வேயர் திரு சுரேஷ் உள்ளிட்ட சில அலுவலர்களுக்கு “பாராட்டு சான்றுகள் மற்றும் விருதுகள்” வழங்கப்பட்டு, இதன் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் (symbolic protest) நடத்தப்பட்டது.

மேலும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் மனுக்கள் அளித்தும், மேல் முறையீடுகள் செய்தும், ஒரு ஆண்டுக்கு மேலாக தகவல் வழங்கப்படவில்லை என்றும், கள ஆய்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இதன் காரணமாக, பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலராக உள்ள அதிகாரிகளுக்கும் அடிப்படையிலான பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.

வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயரதிகாரிகள் நேரில் இல்லாத காரணத்தால், அரசாணை எண் 73/2018-ன் படி, தபால் பிரிவு மூலம் சான்றுகள் மற்றும் கடிதங்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்கிய தபால் பிரிவு எழுத்தருக்கு சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

நில மோசடி குறித்த குற்றச்சாட்டுகள்:

நிகழ்ச்சியில் பேசிய மக்களுக்கான மக்கள் இயக்கம் பொதுச் செயலாளர் முனைவர் தி. கார்த்திக் கண்ணன் கூறுகையில்,
கூடுவாஞ்சேரி – நந்திவரம் கிராமம், ஜெயலட்சுமி நகர் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் குடியிருப்போர் புஞ்சை நிலங்கள், கடந்த 2008ஆம் ஆண்டு சமூக விரோதிகளால் நஞ்சை நிலங்களாக மாற்றி, பொய்யான செட்டில்மென்ட் ஆவணங்கள் உருவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

அந்த ஆவணங்களுக்கு அப்போதைய வருவாய், பதிவுத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் துணையுடன், 50-க்கும் மேற்பட்ட மோசடி ஆவணங்கள் உருவாக்கப்பட்டதாகவும், குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, பதிவுச் சட்டம் பிரிவுகள் 53, 54, 83 ஆகியவற்றின் கீழ், மோசடி ஆவணங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், சாலைகள், கால்வாய்கள், கோயில் நிலங்கள்
ஆகியவற்றிற்கே பட்டா மற்றும் நில அளவை சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நந்திவரம் ஜெயலட்சுமி நகர் நாகாத்தம்மன் கோயில் மற்றும் ஐயப்பன் கோயில் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்போர், சமூக விரோதிகளால் மிரட்டப்படுவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை 50-க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி:

இவ்வாறு போலி பட்டா, போலி நில சான்றுகள் வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் பதிவுத்துறை அலுவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, இந்த கவன ஈர்ப்பு நிகழ்ச்சி காவல்துறையின் முன்னிலையில் அமைதியான முறையில் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மக்களுக்கான மக்கள் இயக்கம் பொதுச் செயலாளர் முனைவர் தி. கார்த்திக் கண்ணன் தலைமையில்,
மூத்த குடிமக்கள் நல சங்க தலைவர் திரு மீனாட்சிசுந்தரம்
மூத்த சமூக ஆர்வலர் திரு பக்தவச்சலம்,திரு VLT R. கிருஷ்ணன்
திரு சிவாஜி ராவ், திரு ஹரிதாஸ், திரு கிருஷ்ணன் (பம்மல்)

இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு துளசிதரன்
தாம்பரம் மாநகர மக்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பு துணை ஒருங்கிணைப்பாளர் திரு ஜானகிராமன்உள்ளிட்ட 20க்கும்             மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக, தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி, மோசடி ஆவணங்களை உருவாக்கியவர்கள் மற்றும் அதற்கு துணை நின்ற அலுவலர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

By TN NEWS