Wed. Dec 17th, 2025

புதுக்கோட்டை, டிசம்பர் 14 :

தமிழ்நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதவும், படிக்கவும் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022–2023 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 2022–2023 முதல் 2024–2025 கல்வியாண்டு வரை தமிழ்நாடு முழுவதும் 15 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, 2025–2026 ஆம் ஆண்டில் எழுதவும் படிக்கவும் தெரியாத அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில் திட்ட செயல்பாடுகள் இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விரிவான கணக்கெடுப்பின் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 7,122 கற்போர் கண்டறியப்பட்டனர். இவர்களுக்காக 2025 ஆகஸ்ட் மாதம் முதல் மாவட்டம் முழுவதும் 358 எழுத்தறிவு மையங்களில், தன்னார்வலர்களின் உதவியுடன் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் ஒரு பகுதியாக, 7,122 கற்போருக்கான இறுதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு, இன்று 14.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல், எழுத்தறிவு மையங்கள் செயல்படும் பள்ளி வளாகங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில், திருமயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரண்மனைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சவேரியார்புரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் நடைபெற்ற புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் அடிப்படை எழுத்தறிவு தேர்வினை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக மாநில இயக்குநர் சுகன்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் செந்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


செய்தி :
M. மூர்த்தி
மாவட்ட தலைமை செய்தியாளர்,
புதுக்கோட்டை

By TN NEWS