Thu. Nov 20th, 2025



நவம்பர் 5 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சியின் 9-வது வார்டு, திருஞான சம்பந்தர் தெரு மற்றும் பக்கிரி முதலி தெரு பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் வடிகால் சீரற்றதால், வெள்ள நீர் தேங்கி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன.

இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர், நகராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பலமுறை சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் நகராட்சி துறை மற்றும் வருவாய் துறை இணைந்து மேற்கண்ட இடங்களை ஆய்வு செய்தது. அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருந்த ஏழு வீடுகள் கண்டறியப்பட்டன. அவற்றில் முதல் கட்டமாக இன்று காலை நான்கு வீடுகள் போக்லைன் இயந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையில் வட்டாட்சியர் கே. பழனி, நகராட்சி ஆணையாளர் சுரேஷ் குமார், நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன், மின்சார வாரிய இளநிலை பொறியாளர் உமா பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்றப் பணியின் போது துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தி: குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS