Sun. Oct 5th, 2025



விழுப்புரம் – செப்டம்பர் 16

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை மற்றும் புறநோயாளி பிரிவுகளில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், நோயாளிகள் பெயர் பதிவு செய்யும் கணினி அமைப்பு கடந்த சில மாதங்களாக செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், தற்போது நோயாளிகளின் விவரங்கள் கையால் எழுதப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. ஒரே ஒருவரை வைத்து பதிவு செய்வதால் நீண்ட நேர தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக விபத்து நோயாளிகள் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 பேர் வந்தாலே அவர்களின் பதிவு மற்றும் சிகிச்சை தாமதமடைவதாக மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் குற்றச்சாட்டு விடுக்கின்றனர். இதனால் உயிர் ஆபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

“ஒரு கணினி கூட வாங்க முடியாத நிலை அரசு மருத்துவமனைக்கு ஏற்பட்டிருப்பது வருத்தம் தருகிறது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, கணினி வசதியை ஏற்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை தாமதம் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

V. ஜெயசங்கர், முதன்மை செய்தியாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS