குடியாத்தம், வேலூர் மாவட்டம் –
குடியாத்தம் ஒன்றியத்தின் மூங்கப்பட்டு ஊராட்சியில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்வெட்டு பாலம் தற்போது சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூங்கப்பட்டு மாரியம்மன் கோவிலின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த கல்வெட்டு பாலம், கிராம மக்கள் தினசரி பயன்படுத்தும் முக்கியப் பாதையாகும். ஆனால் பாலம் பழுதடைந்து சிதிலமடைந்ததால், சைக்கிள், இருசக்கர வாகனம், கார், டிராக்டர் உள்ளிட்ட எந்தவொரு வாகனமும் தற்போது செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இதனால் கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதனை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுக்கள் அளித்துள்ளனர். மேலும், முதல்வர் முகாமிலும் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, “பாலம் உடனடியாக சீரமைக்கப்படாவிட்டால், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து, ஊர் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று மூங்கப்பட்டு கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
செய்தியாளர்: K.V. இராஜேந்திரன், குடியாத்தம்