Thu. Aug 21st, 2025

தூத்துக்குடி மாவட்டம்:
மாணவர்கள் இன்று என்பதை தவிர்த்து எதிர்காலத்திற்கும் சிந்திக்க கூடியவர்களாக இருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் அளித்தது என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி, பிஎம்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று (16.08.2025) தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், வோசா டெக் இணைந்து நடத்தும் மாணவர்களின் புத்தாக்க சிந்தனையை தூண்டும் வகையில் சிந்தனை சிற்பி தனியார் பள்ளி ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மாணவர்களின் புதிய அறிவியல் படைப்புக் கண்காட்சியினை பார்வையிட்டு, ஹேக்கத்தானை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது: “சிந்தனை சிற்பி” என்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கான அறிவியல் ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியாக கருதுகிறேன். மாணவர்களாகிய உங்களுக்கு ஊக்கத்தை அளிக்கக்கூடிய வகையில் இருக்கின்ற இந்நிகழ்ச்சி எங்களுக்கும் எதிர்காலத்தில் நம்பிக்கையை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். குறிப்பாக இந்த வளாகத்தில் மாணவ மாணவியர்கள் உருவாக்கியுள்ள படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அவர்களுடன் உரையாடலை மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு சமூகத்தின் மீது இருந்த அக்கறை வியப்பை ஏற்படுத்தியது. மேலும், எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. குறிப்பாக, வயநாடு, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவு ஏற்படும் பொழுது அங்குள்ள மக்கள் மற்றும் மிருகங்களை காப்பாற்றும் விதமாக, எச்சரிக்கை ஏற்படுத்துகின்ற பொழுது அவற்றை பாதுகாக்க முடியும் என்ற வகையில் செயல்முறை விளக்கங்கள் செய்து வைத்திருந்தனர். மேலும், மழையால் மட்டும் நிலச்சரிவு ஏற்படுவதில்லை. நிலநடுக்கங்கள் உள்ளிட்ட வேறு காரணங்களாலும் நிலச்சரிவு ஏற்படும். ஆகையால் எதிர்காலத்தில் அதுபோன்ற நிலை ஏற்படும்போது ஜிபிஎஸ் வைத்து கண்காணித்து அந்த சூழ்நிலைக்கும் நம்மை தயார் நிலையில் வைத்து கொள்வதற்கு ஏதுவாக விளக்கங்களை மாணவர்கள் அளித்தார்கள்.

ஆகையால் மாணவர்கள் இன்று என்பதை தவிர்த்து எதிர்காலத்திற்கும் சிந்திக்ககூடியவர்களாக இருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் அளித்தது. மேலும், விவசாயத்தில் பயிர்கள் விலங்குகளினால் அளிக்கப்படுவது, தண்ணீர் வீணாக செல்லக்கூடிய சூழ்நிலை இருப்பது உள்ளிட்டவற்றை கணக்கீட்டு விவசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஏதுவாக மாதிரியினை உருவாக்கி வைத்திருந்தார்கள். ஓர் ஆண்டுக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகின்ற டியுப் லைட்களை பத்து ஆண்டுகள் வரை பயன்படுத்துவது குறித்த சிந்தனையுடன் மாதிரியினை உருவாக்கியிருந்தார்கள்.

சந்தைகளில் பொருட்களை வாங்கக்கூடியவர்கள் சமூக அக்கறையுடன் இருக்கின்றவர்களும் உள்ளனர். ஆகையால் நீங்கள் செய்து இருக்கின்ற மாதிரிகளை உலகத்திற்கு முன்னெடுத்து செல்ல வேண்டும். நீங்கள் எவ்வாறு நம்பிக்கையுடன் உருவாக்கி இருக்கீறிர்களோ மக்களும் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும். தூக்கி எறிகின்ற நெகிழி பொருட்களான ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக உயிரி மக்கும் பொருட்களை மாதிரியாக காண்பித்துள்ளீர்கள்.

மேலும், மரங்களை வெட்டுவதற்கு பதிலாக வாழை நார்கள் மூலம் காகிதம், அட்டை உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்வது குறித்து மாணவர்கள் முன் வைத்திருந்தனர். இவ்வளவு சிந்தனைகள் இருக்கின்ற மாணவர்களாகிய உங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து இருக்கிறார்கள். ஆகவே, நம்பிக்கையுடன் அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் முதலீட்டை எதிர்பார்க்காமல், சமூக வலைதளங்களின் வாயிலாக வாய்ப்பை பயன்படுத்துகின்ற பொழுது யாராவது பொருட்களை வாங்குவதற்கு முன்வருவார்கள்.

ஆகவே இன்றைக்கு பல்வேறு தொழில் நுட்பங்களுடன் உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் உங்களது சிந்தனைகளை உலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், போட்டிகளில் பங்கேற்றதுடன் நின்று விடாமல், அறிவியலாளர்களாக, தொழில் முனைவோர்களாக, இந்த உலகத்தை மாற்றக் கூடியவர்களாக வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி இருக்கிறார்கள் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: தொழில் மேம்பாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை இணைந்து தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர்களிடையே அவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக சிந்தனை சிற்பி நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தரமான கல்வியை எதிர்கால சமுதாயமான மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் முதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி, இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம், எண்ணும் எழுத்தும் என்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து ஆசிரியர்களுக்கு கையடக்க மடிக்கணினி வழங்கி, பல்வேறு பயிற்சி அளித்து மாணவர்களுக்கு புதிய திட்டங்களை வாயிலாக புத்தகத்தில் உள்ள அனைத்தையும் கற்று அறிய வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார்கள்.

அதுமட்டுமல்லாது, மாணவ மாணவியர்களின் படைப்பாற்றல், கலை மற்றும் கவிதை எழுதுதல் உள்ளிட்ட திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்கள். சிற்பி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். காவல்துறை மூலம் மாணவ மாணவியர்களிடம் பயிற்சி கொடுக்கப்பட்டது. அனைத்து இளைஞர்களுக்கும் புத்தாக்க நிறுவனம் மூலம் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

நமது சமுதாயத்தில் உள்ள தேவைகளுக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று இளைஞர்கள் இடையே உருவாக்கப்பட்ட பயிற்சி, பள்ளி மாணவ மாணவியர்களிடையே உருவாக்க முயற்சியை மேற்கொண்டு வருகிறார். மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், தொழில்முனைவோர் கலாச்சாரத்தை மாணவர்களிடையே வளர்த்துக் கொள்ளுதல், மாணவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் பங்குஸபெறுகின்ற அனைத்த மாணவர்களும் முடிவெடுக்கும் திறமைகள் மற்றும் தலைமைப் பண்புகள் ஏற்படும். ஆசிரியர்களும் மாணவர்களை தயார் படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சிந்திக்கும் திறன் மாணவர்களிடையே மேம்படும். ஆகவே, மாணவர்கள் சிந்தனை சிற்பியாக உருவாகின்ற நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் கல்வி பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைய வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிந்தனை சிற்பி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தனியார் பள்ளிகளிலும் இத்திட்டம் இன்றைக்கு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் எல்லா வகையிலும் சிறப்பை பெற்றவர்களாக வளர வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் பல்வேறு நிலைகளை அடைவதற்கு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதுபோல் பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதன்மூலம் பெருமை சேர்க்கின்ற வகையில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களிடையே சிந்தனையை ஊக்குவித்து அதன்மூலம் தமிழகத்தின் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

படிப்பு மட்டுமல்லாது, தங்களின் வாழ்க்கை முன்னேறுவதற்காக பல்வேறு இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே, மாணவர்களாகிய நீங்கள் அனைத்து வகையில் உயர வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் பெ.ஜெகன், இயக்குநர், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் ரா.அம்பலவாணன், மாநில திட்ட மேலாளர், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் செ.சண்முகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேஷ் மூர்த்தி, வோசா டெக் நிர்வாக இயக்குநர் மற்றும் சிந்தனை சிற்பி ஹேக்கத்தான் ஏற்பாட்டாளர் சு.வள்ளி, பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சேக் முகைதீன்

இணை ஆசிரியர்

By TN NEWS