தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆகஸ்ட் 11 திங்களன்று மாவட்டதில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் இல்லா தமிழ்நாடு மற்றும் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக கூடாது என விழிப்புணர்வும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கல்வி அறக்கட்டளையில் நடைபெற்ற போதை பொருள் இல்லா தமிழ்நாடு மற்றும் போதைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் E.S.உமா IPS., கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.
சிறப்புரையில்:
📌 போதை பழக்க வழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாக கூடாது இதற்கான தொடர்பு நம்மிடம் இருக்கும் கைபேசியில் இருந்து தான் தொடங்குகிறது அதனை தவறாக பயன்படுத்தக் கூடாது.
📌 இன்ஸ்டாகிராம் ட்விட்டர், ஷார்ட்ஸ் இது போன்ற செயலிகளில் மாணவர்கள் இணைந்துதான் தவறான பாதைக்கு செல்கிறார்கள். அதில் தவறான தொடர்பு கிடைக்கிறது. அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
📌 மாணவர்கள் தங்களை சுற்றியுள்ள சுற்றுப்புறங்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வதில் சமூக பொறுப்பு மாணவர்களுக்கு வேண்டும்.
📌 மாணவர்கள் சிறு சிறு சட்டங்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றங்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடுமையான தண்டனைகள் சட்டத்தில் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். என விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் உமா மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
மேலும், 18 வயதில் இருப்பவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது என்றும் 18 வயதுக்கு பிறகு முறையான ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும் எனவும், பதினெட்டு வயதிற்கு கீழ் வாகனங்கள் இயக்கினால் பெற்றோர்களுக்கு தண்டனை உண்டு என்றும், போதைப்பொருள் விற்பனை செய்யும் மாணவர்கள் பிடிபட்டால் 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் தவறை நான் செய்யவில்லை வேறு நபர்கள் செய்ய தூண்டினார்கள் என்று கூறினாலும் விற்ற நபருக்கும் தண்டனை உண்டு என கூறினார்.
அதற்கு உதாரணமாக ஒரு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு எழுத படிக்க தெரியவில்லை என்றால் அந்த மாணவர் தான் முழு காரணம் அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதற்கு சமுதாயமோ தனது வீட்டில் இருப்பவரோ ஆசிரியரோ அதற்கு காரணம் இல்லை என்பதனையும் விளக்கினார். ஒவ்வொரு தனிநபரும் தன் பெற்றோரின் நிலை அறிந்து சமூகத்தின் நிலை அறிந்து பொறுப்புடன் நடந்து கொண்டால் சமுதாயத்தில் கேடு ஏற்படாது என்று மாணவ மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழியில்;
✅போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.
✅நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.
✅போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
✅போதை பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்.
✅மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல் வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன் என மாணவர்கள், பேராசிரியர்கள், காவலர்கள் என பலரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதேபோன்று விழுப்புரம் சட்டக்கல்லூரியில் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியின் ஏற்றனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்: மதியழகன்.