சங்கரன்கோவில்: அனுமதியின்றி குடிநீர் இணைப்பு – ஊழியருக்கு மிரட்டல் – 2 பேருக்கு சிறை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சி தொட்டியில் இருந்து அனுமதியின்றி வீட்டிற்கு குடிநீர் இணைப்பு எடுத்ததுடன், நகராட்சி ஊழியரை மிரட்டிய இருவருக்கு தென்காசி நீதிமன்றம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தது.
ஓடைத்தெரு, தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (36), அனுமதி மற்றும் கட்டணம் இன்றி குடிநீர் இணைப்பு பெற்றார். இதை துண்டிக்கச் சென்ற நகராட்சி ஊழியர் சிவகுமாரை, மாரிமுத்து மற்றும் டைட்டஸ் ஆதித்தன் (47) திட்டியதோடு பணி செய்யவிடாமல் தடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் சங்கரன்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், நீதிபதி பி. ராஜவேலு, மாரிமுத்துவிற்கு 1 ஆண்டு சிறை மற்றும் ₹1,700 அபராதம், டைட்டஸ் ஆதித்தனுக்கு 3 மாத சிறை மற்றும் ₹700 அபராதம் விதித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் பி. குட்டி மருதப்பன் வழக்கில் ஆஜராகினார்.
ஜோ.அமல்ராஜ் – தலைமை செய்தியாளர். தென்காசி மாவட்டம்.