Wed. Jul 23rd, 2025

*தரமற்ற குடிநீர் கேன்களை பறிமுதல் செய்யனும்.*

*தரமற்ற கேன் குடிநீர் விற்பனை அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.*

*திருப்பூரில் கேன்’ தண்ணீர் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. தேவை அதிகமானதை பயன்படுத்தி, பல நிறுவனங்கள் முளைத்தன. அந்த குடிநீர் பாதுகாப்பானதா, தரமானதா என்று யாரும் பார்ப்பது இல்லை.*

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் து.கிருஸ்துராஜ் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

அப்போது திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனு…

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள பல்வேறு இடங்களில் குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்களில் தரச்சான்று மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் திருப்பூர் மாவட்ட பகுதியில் சில குடிநீர் கம்பெனிகள் முன்தேதியிட்டு கேன்களில் குடிநீரை அடைத்து விற்பனை செய்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பஸ் நிலையம், கடைவீதி, போன்ற இடங்களில், சிறிய கடைகளில் விற்கப்படும், குடிநீர் பாட்டில்கள், தரமற்றதாகவும், பாக்கெட்டுகளில் துர்நாற்றம் வீசுவதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கேன் தண்ணீர்:சில நிறுவன, கேன் தண்ணீர் தொடர்பாக பல புகார்கள் எழுந்துள்ளன. தண்ணீரில் நெல்லிக்காய் பொடியை கலந்து வடிகட்டிய பிறகு, தண்ணீர் சற்றே சுவை மாறிவிடும். இதை ‘மினரல் வாட்டர்’ என, கேன்களில் அடைத்து விற்கின்றனர். இன்னும் சில இடங்களில் ரசாயனப் பொடி கலந்தும், தண்ணீரின் சுவை மாற்றப்படுவதாக புகார் எழுகிறது.

பாதுகாப்பான, சுகாதாரமான, தரமான குடிநீரை தேர்ந்தெடுப்பது பொதுமக்களின் உரிமை. பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை தரவேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் கடமை. அதேநேரம், குடிநீரை விற்கும் நிறுவனங்களும் பொறுப்பை உணர்ந்து, பாதுகாப்பான குடிநீரையே விற்க வேண்டும்.

எனவே தரமில்லாத குடிநீர் விற்பனையை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

திருப்பூர் சரவணக்குமார்.

By TN NEWS