எழில் நகர், கண்ணகி நகர் பகுதிகளில் கணக்கெடுப்பு தொடக்கம்.
சென்னை: பள்ளிக்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி, 2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி செல்லாத மற்றும் பள்ளியிலிருந்து இடை நிறுத்திய மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவதற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் சென்னை மாவட்டத்தில் தொடங்கியுள்ளன.
முதற்கட்டமாக கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான தொடக்க கூட்டம் சென்னை எழில் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் அ. புகழேந்தி மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலர் ஏ.டி. காமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்வில் கல்வித்துறை அதிகாரிகள், நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு நிறுவனங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம், இடை நின்ற அனைத்து மாணவர்களையும் மீண்டும் கல்வி முறைப் பாதையில் சேர்த்து, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதி செய்யும் செயல்முறையாகும்.
ஆர். சுதாகர் – துணை ஆசிரியர்

