Tue. Jul 22nd, 2025

நாகர்கோவில்:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்கள், தங்களின் பணி நிரந்தரத்துக்கான கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 16ஆம் தேதி நாகர்கோவிலில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த தகவலை நாம்தமிழர் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் திரு. ஆ. மோஸ்லின் பியர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில், “பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பூரண மதுவிலக்கு, பணிப்பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள், பணியின் போது மரண இழப்பீடு, 10 ஆண்டுகளுக்கு மேல் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரமானதாக மாற்றம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

ஏற்கனவே ஏப்ரல் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக, குமரி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் சரவணக்குமார் – செய்தியாளர்.

By TN NEWS