தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த ரெட்டைகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்த மானஷா (வயது 14), இன்று காலை பள்ளிக்கு வந்தபோது பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக அவரை சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு தேவையான சிகிச்சை வசதிகள் இல்லாததால், அவசரமாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டார். ஆனால் வழித்தடத்தில் சிகிச்சை பெற்றவாறு மானஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
சுரண்டை பகுதியில் சுமார் 70,000 மக்கள் வசித்து வருகிறார்கள். இருப்பினும் இங்கு இன்னும் முழுமையான படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை இல்லாதது ஏழை மக்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. விபத்து, அவசர சிகிச்சை தேவைகளில் உரிய மருத்துவ உதவி கிடைக்காததால், பல உயிர்கள் கேள்விக்குறியாகிக்கொண்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு, சுரண்டையில் உடனடியாக பல்நோக்கு மருத்துவ சேவையுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமல்ராஜ் – தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.