Tue. Jul 22nd, 2025



உசிலம்பட்டி, பிப். 21: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலின் மாசி பெட்டி திருவிழா, வழமைபோல் வரும் பிப். 26 முதல் 28 ஆம் தேதி வரை விமர்சையாக நடைபெற உள்ளது.

திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால், கோவிலுக்கு செல்லும் சுமார் 12 கிமீ தொலைவில் உள்ள சாலை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில், திருவிழா கமிட்டியினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், உசிலம்பட்டி இரயில் நிலையம் அருகே, பழைய இரயில்வே பாதையின் இரும்புக் கம்பிகள் குவிக்கப்பட்டு இருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து தடங்கலுக்கு உள்ளானது. இதை கருத்தில் கொண்டு, திமுக நிர்வாகிகள் மற்றும் கோவில் விழா கமிட்டியினர், இரும்பு கம்பிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே அலுவலர்கள், உரிய அனுமதி பெறாமல் பணிகளை செய்யக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனால் சில நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உரிய அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டு, பழைய இரயில்வே பாதையின் இரும்பு கம்பிகளை அருகிலேயே ஒதுக்கி வைத்துவிட்டு, பிந்தைய நிலையில் மீண்டும் பழையபடி ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பாதை சீரமைக்கும் பணிகள் தொடங்கின.

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS