**50 ஆண்டுகளுக்குப் பின் மாணவர் கூட்டிணைவு: பள்ளி, சக மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்**
**உசிலம்பட்டி:** மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1973-74ல் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (27.01.2025) ஒரே மேடையில் கூடி, பள்ளி மற்றும் தங்கள் சக மாணவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் ஒன்றிணைந்தனர். இந்நிகழ்வு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
மதுரை, தேனி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 70க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், பள்ளியில் நடந்த இணைவிழாவில் கலந்து கொண்டு பழைய நினைவுகளைப் பகிர்ந்தனர். 2024 ஆகஸ்டில் இதேபோன்ற நிகழ்வு ஏற்பாடு செய்தபோது குறைந்தேர் மட்டுமே வந்ததாகவும், இம்முறை “வீட்டு விழா” போன்று அதிகம் பேர் கலந்து கொண்டதாகவும் மாணவர்கள் குறிப்பிட்டனர்.
**பள்ளி வளர்ச்சிக்கும், வறுமையில் உள்ள சக மாணவர்களுக்கும் உதவுதல்**
இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம், பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்கும், தங்களுடன் படித்து தற்போது வறுமையில் உழலும் சக மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுவதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். “1974ல் எங்களுடன் படித்த ஒவ்வொருவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்கிறோம். சிலர் இறந்துவிட்டாலும், அவர்கள் குடும்பத்தாருக்கு ஆதரவளிக்கப்படும்” என்று கூறினர். தற்போதும் சில மாணவர்களைத் தேடி வருகிறதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்வு, ஐந்து தசாப்தங்களுக்குப் பின் நடந்த முதல் பெரிய கூட்டமாகக் கருதப்படுகிறது. பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவில், மாணவர்கள் பள்ளி நாட்களின் நகைச்சுவை நிகழ்வுகள், ஆசிரியர்களின் நினைவுகள் என பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
**தமிழ்நாடு டுடே செய்தியாளர் – வீரசேகர்**

