Tue. Jul 22nd, 2025

அன்று காலையில் எழுந்து பெண்கள் தங்களது அண்ணன் தம்பிகள் குடும்ப நலன்கள் வேண்டி கனுப்  பிடி வைப்பது வழக்கம்.
கனுப்  பண்டிகை அன்று சூரிய ஒளி படும் ஒரு  இடத்தில் மஞ்சள் இலையைப் , பரப்பி அதன்மேல் பழைய பொங்கல், கூட்டு, பல வண்ணச்  சாதங்கள்( சோறு), கரும்பு, வாழைப் பழம் முதலியவற்றை வைத்து நிவேதனம் செய்து, கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து வணங்குவது என்பது நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு இன்றும் தொடர்கிறது.

இது ஒரு வகையான திருஷ்டி(கண்ணூறு) கழித்தலாகும்.  

தமது குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டி கனுப்  பிடி வைக்கும் தமது சகோதரிகளுக்கு அண்ணன் தம்பிகள் பொங்கல் சீர் செய்வது  என்பதும் இன்றும் வழக்கில் உள்ளது. “பெண் வாழ பிறந்தகம் வாழ”  என்று கூறுவார்கள் . நமது சகோதரிகள் நலமாக இருந்தால் அவள் பிறந்த வீடான நமது வீடும் (குடும்பமும்)  நலமாக இருக்கும்.

அண்ணன் தம்பி நல்வாழ்விற்கு சகோதரிகளும், அக்காள் தங்கை நல்வாழ்விற்கு அண்ணன் தம்பிகளும் வேண்டி கொண்டாடும் அருமையான பண்டிகை இந்த பொங்கலும் கனுப்  பண்டிகையும்.     

குடும்ப ஒற்றுமை வளர்வதற்கும் சகோதர பாசம் நிலைப்பதற்கும் கனுப்  பிடி வைத்தலும், பொங்கல் சீரும் பெரும் பங்கு வகிக்கின்றன என்றால் மிகையாகாது.

சகோதரிகளே உங்கள் அண்ணன் தம்பிகள்  குடும்ப நலனுக்கு கனுப்  பிடி வையுங்கள்.

சகோதரர்களே உங்கள் அக்காள் தங்கைகளுக்கு மறக்காமல் இந்தப்  பொங்கலுக்கு  நேரில் சென்று சீர் கொடுங்கள். வெளி ஊரில்  இருந்தால் தபால் மூலம்  சீர் அனுப்புங்கள். உங்கள் குடும்ப வாழ்வு சீரும் சிறப்புமாக இருக்கும்.

கூட்டுக் குடும்பம் வேண்டும், கணுப் பாடலும் பூஜையும்.

கணு அன்று ,நம்மை, விட  வயதில், மூத்த பெண்
மணிகளை நமஸ்கரித்து,அவர்களிடம்,   நெற்றியில் மஞ்சள்  கீறி விடச்சொல்லி, கையில்  கொண்டு போகும் பசு மஞ்சளை  கொடுப்போம் ,அவர்களும்,நல்ல வார்த்தைகளை கூறிக்கொண்டே
நெற்றியில்  மஞ்சளை கீற்றி விடுவார்கள்.

வாழ்த்துப் பாடல்

தாயோடும், தந்தையோடும சீரோடும். சிறப்போடும், பேரோடும், புகழோடும், பெருமையோடும், கீர்த்தியோடும், சிறுவயதில் தாலிகட்டி பெரியவளாகி பிள்ளைகள் பெற்று கொண்டவன் மனம் மகிழத் தையல்நாயகி போலத் தொங்கத் தொங்கத் தாலிகட்ட தொட்டிலும் பிள்ளையுமாக, மாமியார் மாமனார் மெச்ச நாத்தியும் மாமியும் போற்ற பிறந்தகத்தோர் பெருமை விளங்க பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க உற்றார் உறவினரோடு புத்தாடை புது மலர் சூடி புது மாப்பிள்ளை மருமகளோடு புது புது சந்தோஷம் பெருகி ஆல் போல் தழைத்து அருகம் போல் ஏரோடி என்றென்றும் வாழணும் எப்போதும் சிரித்த முகத்தோடு.

என்று சொல்லி வாழ்த்துவர். 

பிறகு, வீட்டிற்கு ,வந்து காக்காய் பொடி வைத்து,
அதை ஜலம் தெளித்து, நீர்  சுற்றி  மணி அடித்து  சூடன்,காண்பித்து, பிரார்த்திக்க வேண்டும்,    காக்காய் பொடி வைத்தேன்
கனுப்பொடி  வைத்தேன்,காக்காய்க்கு, எல்லாம். கல்யாணம் காக்காய் கூட்டம் பிரிந்தாலும், என் கூட்டம், பிரியாது
இருக்கணும் என்று கூறி நமஸ்காரம், பண்ணிவிட்டு, குளித்து கலந்த சாதங்கள்,செய்து, ஸ்வாமிக்கு நிவேதித்து, காக்காய்க்கு
அன்ன மிட்டு பிறகு சாப்பிடுவோம்

கனுப் பண்டிகை பாடல் :

( அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் )

காக்கா பிடியும்  கனுப்  பிடியும் 
கனிவாக நானும்  வெச்சேன்

மஞ்சள் இலையில் விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்

காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்

கலர் கலரா சாதம் வெச்சேன் 
கண்டிப்பா கரும்பும் வெச்சேன்

அண்ணன் தம்பி குடும்பமெல்லாம் 
அமர்க்களமா வாழ வெச்சேன்

இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இதயத்தோட எடுத்து வெச்சேன்

கூட்டு வெச்சேன் கூவி வெச்சேன்
கூட்டு குடும்பம் கேட்டு வெச்சேன்

பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன் 
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்

கல்பூரம் ஏத்தி வெச்சேன்
கடவுளை நான் வணங்கி வெச்சேன்

ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை துதித்து வெச்சேன்.

நன்றி: ஸ்ரீராமஜயம்.

தொகுப்பு: சேக் முகைதீன்.

By TN NEWS