Tue. Jul 22nd, 2025

“திருமாவளவன் தான் எனது கடைசி மாணவன். திருமாவளவனுக்காகவே பல்கலைக் கழக விதிகளையே மாற்றினேன்” எழுச்சித் தமிழரின் PhD வழிகாட்டி, பேராசிரியர் சொக்கலிங்கம் பேச்சு.

ஆண்டுக்கு 15 மாணவர்கள் மட்டுமே சேர்த்து படிக்கக் கூடிய MA கிரிமினாலஜி படிப்புக்கு மொத்தம் 250 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அத்தனை பேருக்குமான நுழைவுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றே திருமாவளவன் அந்த படிப்பில் சேர்ந்தார். தேகம் மெலிந்த அமைதியான திருமாவளவனை 20 வயதில் எனது மாணவனாக முதன் முதலில் பார்த்தேன்.

எனது 15 மாணவர்களில் திருமாவளவன் மட்டும் வகுப்பில் எதுவுமே பேசியது இல்லை. விசாரித்ததில் அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் தான் அமைதியாக இருந்ததாகச் சொன்னார். எனவே, அன்றுமுதல் அவருக்காகவே தமிழில் வகுப்பெடுக்க ஆரம்பித்தேன்.படிப்பை முடித்த கையோடு தடயவியல் துறையில் வேலைக்குச் சேர்ந்தார்.

விசாரித்ததில் மாதத்திற்கு 10 நாள்கள் கூட வேலைக்கு போக மாட்டாராம். அவருக்கு அலுவலக வேலையை விட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேலை செய்யவே விருப்பமாய் இருந்தது. பிறகு 1998 ல் திருமாவளவன் என்னைச் சந்தித்து PhD படிக்க வேண்டும் என்றும் அதற்கு நீங்கள்தான் எனக்கான வழிகாட்டியாய் இருக்க வேண்டும் என்றும் பதிவு செய்து கொண்டார். எனது வழிகாட்டுதலில்தான் PhD படிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தார்.

இந்நிலையில் மனோன்மணியம் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக என்னை அரசு நியமித்தது. இதில் சிக்கல் என்னவென்றால், இனி நான் திருமாவளவனுக்கு PhD வழிகாட்டியாக தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் எனது வழிகாட்டலைத் தான் என் மாணவன் விரும்பினார். ஒரு பல்கலையின் துணைவேந்தர் எந்த ஒரு மாணவனுக்கும் PhD வழிகாட்டியாக இருக்க முடியாது என்பது விதி. திருமாவளவனுக்காக விதிகளை நான் மாற்றியமைத்தேன்.

ஆட்சிமன்ற குழுவிடம் சிறப்பு அனுமதி பெற்றே,என் மாணவனுக்கு வழிகாட்டியாகத் தொடர்ந்தேன். இப்படியான சூழலில்,6 ஆண்டுகள் ஜப்பான் அரசும்,2 ஆண்டு்கள் டெல்லி அரசும் என்னை அழைத்துக் கொண்டது. அதனால் தான் திருமாவளவன் PhD முடிப்பதற்கு இவ்வளவு தாமதமானது.

PhD ஆய்வு சம்மந்தமாக என்னைச் சந்திக்கத் தனியாகத்தான் வர வேண்டும் என்ற என் கட்டளையை ஒரு மிகப் பெரிய அரசியல் கட்சியின் தலைவராக இருந்தும் கடைப் பிடித்துக் கடுமையாக உழைத்தார். தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒருமுறையும் அவர் என்னை அணுகவில்லை. அப்படி அணுகியிருந்தால் அதை நானும் அனுமதித்திருக்க மாட்டேன். நான் மிகவும் கண்டிப்பானவன்.

3வது முறையாக அவரது ஆய்வை திருத்தம் செய்து நான் திருப்பி அனுப்பிய பிறகே பிழையற்ற தரமான கடைசியான வரைவை நான் ஏற்றுக் கொண்டேன். ஆங்கிலமே தெரியாத 20 வயது மாணவனாய் அறிமுகமான என் மாணவன், இந்த திருமாவளவன் 35 ஆண்டுகள் கழித்து தனது PhD வாய்வழித் தேர்வில் (Viva) எங்களை எல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார் ஆங்கிலத்தில் பேசி. இவரின் தகுதிக்கும் திறமைக்கும் தரமான சிந்தனைக்கும் ஒருநாள் நிச்சயம் தனது இலக்கை அடைவதற்கு வழி வகுக்கும்!

தொகுப்பு – சேக் முகைதீன்.

By TN NEWS