
இராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீ விபத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்!தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்க எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; இராமநாதபுரம் மரைக்காயர் பட்டினம் பகுதியைச் சார்ந்த அனீஸ் பாத்திமா என்பவருக்கு நேற்று இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆம்புலன்ஸ் வாலாந்தரவை அருகே கோர விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அனீஸ் பாத்திமாவுடன் ஆம்புலன்ஸில் சென்ற சகுபர் சாதிக், வருசை முகமது ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, படுகாயம் அடைந்த மூவரும் சுமார் 2 மணி நேரம் சிகிச்சை கிடைக்கப் பெறாமல், தாமதப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் இந்த உயிரிழப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட தாமதமும், கவனக்குறைவுமே இந்த உயிரிழப்புக்கு காரணமாகும். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு, அரசு மருத்துவமனை வளாகத்தின் மற்றொரு பகுதியிலோ அல்லது வேறு மருத்துவமனையிலோ அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் அந்த உயிர்கள் காப்பாற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், எவ்வித சிகிச்சையும் கிடைக்கப் பெறாத நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.ஆகவே, தமிழக அரசு உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமல்ராஜ் – தென்காசி மாவட்டம் செய்தியாளர்.

