Wed. Jun 3rd, 2026

குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து உதவி வழங்க கோரிக்கை..!🙏🙏🙏

வந்தவாசி, ஜூன் 3:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே விஷப்பாம்பு கடித்ததில் விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மீன்கார் கண்ணையன் என்பவரின் மகன் பூங்காவனம் (50), விவசாய கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு குப்பு என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை விவசாய நிலத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை விஷப்பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் விஷம் உடலில் பரவியதால் அவருக்கு கண்பார்வை மங்கியதுடன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை உடனடியாக அருகிலுள்ள வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பூங்காவனம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், பிற்பகல் 2 மணியளவில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குடும்பத்தினரின் கோரிக்கை🙏

அன்றாட வருமானத்தை நம்பி வாழ்ந்து வந்த குடும்பத்தின் ஆதாரமாக இருந்த பூங்காவனம் உயிரிழந்துள்ளதால், அவரது குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணத் தொகை வழங்கி, குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும் என அவரது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தென்னாங்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சி. அசோக்
வந்தவாசி நிருபர்
Tamilnadu Today

By TN NEWS