Wed. Jun 3rd, 2026

தமிழக மின்வாரியத்தின் புதிய “EB Auto Pay” சேவை அறிமுகம்.

சென்னை, ஜூன் 2:

மின் கட்டணத்தை மறந்து அபராதம் செலுத்தும் நிலைக்கு முடிவு கட்டும் வகையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) புதிய “EB Auto Pay” தானியங்கி கட்டணச் செலுத்தும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சேவையின் மூலம், மின் நுகர்வோர் ஒருமுறை பதிவு செய்துவிட்டால், ஒவ்வொரு மாதம் அல்லது இருமாத மின் கட்டணமும் தானாகவே வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தப்படும். இதனால் தாமதக் கட்டண அபராதத்தை முழுமையாகத் தவிர்க்க முடியும்.

என்ன இந்த EB Auto Pay?

“EB Auto Pay” என்பது மின் நுகர்வோர் சார்பில் கட்டணத்தை தானாகச் செலுத்தும் டிஜிட்டல் வசதியாகும். தேசிய தானியங்கி பரிவர்த்தனை அமைப்பான (NACH) முறையின் மூலம் இது செயல்படுகிறது.

மின் கட்டணம் கணக்கிடப்பட்டு பில் உருவாக்கப்பட்ட பிறகு, குறிப்பிட்ட நாளில் நுகர்வோரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே தொகை பிடித்தம் செய்யப்படும்.

எப்படி பதிவு செய்வது?

நுகர்வோர் தமிழ்நாடு மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpdcl.org-ல் உள்நுழைந்து “EB Auto Pay” வசதியைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின்,

* மின் நுகர்வோர் எண்
* வங்கிக் கணக்கு விவரங்கள்
* அல்லது UPI விவரங்கள்

போன்ற தகவல்களை பதிவு செய்து சேவையை செயல்படுத்திக் கொள்ளலாம்.

முன்கூட்டியே எச்சரிக்கை…?

கட்டணம் பிடித்தம் செய்யப்படுவதற்கு முன்பாக, பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி கட்டண விவரங்கள் தெரிவிக்கப்படும்.

இதன் மூலம் கணக்கில் போதிய தொகை இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

நுகர்வோருக்கு கிடைக்கும் நன்மைகள்.

✔ மின்கட்டணம் செலுத்த மறக்கும் பிரச்சினை இல்லை.

✔ தாமதக் கட்டண அபராதம் தவிர்க்கப்படும்.

✔ EB அலுவலகம் அல்லது கட்டண மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

✔ ஆன்லைன் கட்டணச் செலுத்தும் சிரமம் குறையும்.

✔ கட்டணம் செலுத்தியதற்கான ரசீது தானாக கிடைக்கும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு உறுதி.

இந்த “EB Auto Pay” சேவை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் (TNPDCL) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விளக்கப் புத்தகமும் மின்வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகமான இந்த புதிய திட்டம், தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மின் நுகர்வோருக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்.

By TN NEWS