Sun. May 31st, 2026

கன்னியாகுமரி, மே 31:

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் தாய், மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த உறவினரின் உடலை பார்க்கச் சென்ற குடும்பத்தினரே மற்றொரு விபத்தில் சிக்கி பலியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி துரைச்சி (42). இவர்களது மகன் கிஷோர் (18) கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார். துரைச்சியின் தம்பி சுரேஷ் (40) மற்றும் உறவினர் சிவகாமி (55) ஆகியோரும் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சுரேஷின் மைத்துனர் ஒருவர் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த துயரச் செய்தியை அறிந்த சுரேஷ், தனது அக்காள் துரைச்சி, மருமகன் கிஷோர் மற்றும் உறவினர் சிவகாமி ஆகியோருடன் காரில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். காரை சுரேஷ் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, பழுதாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டெம்போ வாகனத்தின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக கார் வேகமாக மோதியது.

இந்த விபத்தின் தாக்கம் மிகவும் கொடூரமாக இருந்ததால், காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது. காருக்குள் இருந்த நால்வரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், துரைச்சி மற்றும் அவரது மகன் கிஷோர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிவகாமி மற்றும் சுரேஷ் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவகாமியும் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த சுரேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த துரைச்சி, கிஷோர் மற்றும் சிவகாமி ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உறவினரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்கச் சென்ற குடும்பத்தினர் மீதே மரணம் கோரமாக தாக்கிய இந்த சம்பவம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஷாலு V.J.
தமிழ்நாடு டுடே, கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்

By TN NEWS