சென்னை, மே 30:
சென்னை கோட்டூர்புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்குட்பட்ட வசிக்கும் மக்கள், சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக தங்களது வீடுகள் இடிக்கப்படுவதாகக் கூறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுதியில் உள்ள பழைய வீடுகளை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், மாற்று குடியிருப்பு மற்றும் உரிய இழப்பீடு வழங்கப்படாமல் வீடுகள் இடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் சிலர் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பெண்கள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்ற சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தாங்கள் வசித்து வந்த இடத்தில் இருந்தே புதிய குடியிருப்புகளை அமைத்துத் தர வேண்டும் என்றும், சாலை விரிவாக்கத் திட்டத்தால் பாதிக்கப்படும் 195 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், மாற்று வசதி ஏற்படுத்தாமல் வீடுகளை அகற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய பொதுமக்கள், தங்களது வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
போராட்டம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு டுடே. மீடியா நெட்வொர்க் பார்வை:
சாலை விரிவாக்கம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானவை என்றாலும், அந்தத் திட்டங்களால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வுரிமை, குடியிருப்பு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படுவது அரசின் முக்கிய பொறுப்பாகும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய மாற்று வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்ட பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்.
