Sat. May 30th, 2026

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

குடியாத்தம், மே 30:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவிழாவையொட்டி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 26-ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மேலும், நேற்று முன்தினம் இரவு ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று காலை கெங்கையம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மன் சிரசு ஊர்வலம் தட்டப்பாறை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. ஊர்வலத்தின் போது பக்தர்கள் வெள்ளம் போல் திரண்டு வந்து அம்மனை வழிபட்டனர்.

நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ஏராளமான பக்தர்கள் சேவல் மற்றும் ஆடுகளை காணிக்கையாக வழங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மன் சிரசு மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் பாரம்பரிய முறையில் கண் திருப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த திருவிழாவில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று அம்மனின் அருளைப் பெற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தட்டப்பாறை, சின்னாளப்பள்ளி கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் மற்றும் ஊர் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா.

By TN NEWS