விழுப்புரம், மே 21: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ ஒட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.05.2026) சென்சஸ் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் லூர்துசாமி உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
2027-ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெறவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட அளவில் திறமையாகச் செயல்படுத்தும் வகையில், அலுவலர்களுக்குத் தேவையான வழிமுறைகள், பதிவேடுகளைப் பூர்த்தி செய்யும் முறைகள், எண்ணிக்கை நெறிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு குடும்பத்தையும் துல்லியமாகப் பதிவு செய்வது, புதிய டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துவது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் பயிற்சியில் விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் பல கட்டங்களாக இப்பயிற்சி தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
✍️ செய்தி: கே. மாரி, விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர்
