Thu. May 7th, 2026

சென்னை – மே 7: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், சென்னை ஆளுநர் மாளிகையில் மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இதையடுத்து ஆட்சியமைப்பில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகளை விஜய் தலைமையிலான கூட்டணி இன்னும் எட்டாத நிலையில், 5 இடங்களை வென்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆதரவு அறிவித்துள்ளது. தவெக கூட்டணி 113 இடங்களையும், எதிர்க் கட்சிக் கூட்டணிகள் 121 இடங்களையும் கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளுடனான பேச்சு வார்த்தைகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ABP தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிவு; எதிர்க்கட்சியாக திமுக?

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அறிவித்ததையடுத்து, திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக 59, அதிமுக 47, காங்கிரஸ் 5, பாமக 4, ஐயூஎம்எல் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் 2, விசிக 2, தேமுதிக 1, பாஜக 1, அமமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, திமுக வலிமையான எதிர்க்கட்சியாகவே செயல்படுமென தெரிவித்துள்ளார். “காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் துரோகத்தையும் மீறி, வலிமையான எதிர்க்கட்சியாகவே செயல்பட திமுக முடிவு செய்துள்ளது. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில் பாஜகவை வலியுறுத்தி வருகிறது அதிமுக. இது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான செயலாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகனங்களில் சர்ச்சை…?

தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, விஜய்க்கு முதலமைச்சருக்கு வழங்கப்படும் கான்வாய் வாகனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், கான்வாய் வாகனங்கள் திடீரென வாபஸ் பெறப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 நாட்களாக விஜய்க்கு கான்வாய் வாகனங்களுடன் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து நீலாங்கரை வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்பே அவை தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. தனியாக காரில் பயணித்த விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பது குறித்த குழப்பத்தையே மேலும் அதிகரித்துள்ளார்.

ஆனால் வேறொரு தகவலில், மே 5 ஆம் தேதி கான்வாய் வாகனங்கள் நீலாங்கரை விஜய் இல்லத்திற்கு வந்ததாகவும், ஆனால் விஜய் மறுநாள் பயணித்தபோது அவை இல்லாமல் இருந்ததாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது விஜயின் விருப்பப்படியோ அல்லது அதிகாரப்பூர்வ நடைமுறையின்படியோ நடந்திருக்கலாம்.

ஆளுநரின் நிலைப்பாடு – ஆட்சி அமைப்பதில் இழுபறி…?

‘ஆளுநர் மாளிகை வழியாக பாஜக அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. விஜய்யை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல’ என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கை…?

தேர்தல் முடிவுகளை அடுத்து, முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உளவுத்துறை காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏறக்குறைய 108 காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலவரம் என்ன?

தவெக ஆட்சி அமைப்பதில் பிரச்சனைகள் இருந்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆளுநரிடம் முறையாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டு பெரும்பான்மையை நிரூபிக்க ஏதுவாக 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டிருக்கிறது. இதற்கு ஆளுநர் சம்மதித்திருந்தால், விரைவில் முதலமைச்சராகவும், அமைச்சர்களாகவும் பதவியேற்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேக் முகைதீன்.

By TN NEWS