Thu. Apr 23rd, 2026

தென்காசி, ஏப்ரல் 18:
தென்காசி மாவட்டம் பகுதியில் இருந்து கேரளா மாநிலத்திற்குச் செல்லும் கனிம வளங்களை ஏற்றிய கனரக லாரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியரும் (Collector), மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கும் (SP) மனு அளிக்கப்பட்டுள்ளது.

மனுவில் கூறப்பட்டதாவது: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக லாரிகள் தற்போது அதிகமாக தென்காசி வழியாக இயக்கப்படுகின்றன. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்த லாரிகள் செங்கோட்டை – புளியரை பாதையை பயன்படுத்தி வருகின்றன.

இதனால், அந்தப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு செல்லுபவர்கள், திருவனந்தபுரம் விமான நிலையம் செல்லும் பயணிகள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன என்பதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, செங்கோட்டை – புளியரை சோதனைச் சாவடிகளில், அனைத்து கனரக லாரிகளும் கட்டாயமாக சோதனை செய்யப்பட வேண்டும். அவற்றில் செல்லுபடியாகும் ரசீது, அனுமதி (Permit), மற்றும் ஏற்றப்பட்டுள்ள பொருட்களின் எடை ஆகியவை சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தென்காசி மாவட்ட செய்தியாளர்
அமல்ராஜ்

By TN NEWS